பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விதைக்கனி

ரு பெண்ணின் வாழ்க்கையில் முதன் முதலாக ஏற்படும் தாய்மை, புதுமையும் பூரிப்பும் தரக்கூடிய இன்ப நிகழ்ச்சி; அச்சங்கலந்த இன்பம்; பெருமிதம் கொள்ளும் பேறு; முல்லை முதன் முதலாகக் கருவுற்றிருந்தபோது என்ன உணர்வின்பங்களைப் பெற்றாளோ, அவற்றை அப்படியே கடிதத்தில் முடிந்து தோழிக்கு அனுப்புகிறாள்.

கண்மணி உன்கா துக்குக்
கரும்பான சேதி யொன்று.
பெண்மையால் விரைவில் நானோர்
பெரும்பயன் பெறப்போ கின்றேன்.
பொன்னுடல் காரி இன்று
பொருளுடல் காரி யானேன் ;
என்மடி கனத்துப் பார
இளநீர்த்தெங் காகி விட்டேன்.


உண்மைதான்! ஆற்ற லாலே
உயர்ந்தவர் ஆண்கள்; ஆனால்
பண்மொழி! கவிஞ ரைப்போல்
படைப்பாற்றல் நமக்குத் தானே ?
மண்ணுழக் கலப்பை யாகும்
மதிப்பன்றி. ஆட வர்க்குப்
பெண்மைபோல் தம்மில் ஒன்றைப்
பிறப்பிக்கும் பெருமை யுண்டா?