பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5


ஆனால் அக்கட்டடங்களெல்லாம் காலத்தால் அழிவுற்றன. மன்னர்கள் வாழ்ந்த மாபெரும் அரண்மனைகள் யாவும் மண்ணோடு மண்ணாக மறைந்தன. பண்டைத் தமிழ் மன்னர்கள் தங்களுடைய பெருமையை நிலைநாட்டுவதற்காக மாபெரும் கோவில்களை எழுப்பினர். அவைகளுள் பல அழிந்துவிட்டன. சங்க காலத்தில் கோவில்களெல்லாம் செங்கற்களாலும், மரத்தாலுமே கட்டப்பட்டன. முதன்முதலாக நாடெங்கும் பெருங்கோவில்களை எழுப்பியவன் சைவ சமயப் பற்றுமிக்க செங்கணான் என்ற சோழ மன்னனே. அவன் சிறப்பைச் சேக்கிழார் போன்ற பெரும் புலவர்கள் பாராட்டிப் பாடியிருக்கின்றனர். அம்மன்னன் செங்கற்களாலும் மரங்களாலுமே அக்கோவில்களே எழுப்பினான். அக்கோவில்கள் காலத்தால் அழிவுற்றன.

ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பல்லவர்கள் தமிழகத்தை ஆளத் தொடங்கினர். கட்டடக் கலையில் புதிய திருப்பத்தையும், மறு மலர்ச்சியையும் உண்டாக்கியவர்கள் இவர்களே. இவர்கள் காலத்திலேயே, பெரிய கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து அடுக்கிக் கட்டப்பட்ட கற்றளிகள் தோன்றின. முதல் முதலாகக் கற்றளிகளைத் தமிழகத்தில் எழுப்பிய மன்னன் இராச சிம்ம பல்லவன் என்பவன். காஞ்சியில் உள்ள ஏகாம்பர நாதர் கோயில் இவனால் கட்டப்பட்டதாகும். அஃது இன்றும் அழியாமல் இவன் சிறப்பைப் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.