பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6


பல்லவர்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் சிறப்போடு ஆட்சி புரிந்தவர்கள் பிற்காலச் சோழர்கள் (Imperial Cholas). இவர்கள் தஞ்சையையும், கங்கை கொண்ட சோழபுரத்தையும் தலைநகரங்களாகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். இவர்களில் இராசராச சோழனும் அவன் மகனான இராசேந்திர சோழனும் குறிப்பிடத் தக்கவர்கள். இராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெரிய கோவிலும் இராசேந்திரன் எழுப்பியுள்ள கங்கை கொண்ட சோழபுரக் கோவிலும் தமிழ்நாட்டுச் சிற்பக் கலையின் சிகரங்களாகும். இச் சோழர்கள் வாழ்ந்த அரண்மனைகள் யாவும் அழிவுற்றன. எனவே சோழர் காலத்து அரண்மனைகளின் அமைப்பைப் பற்றி அறிந்து கொள்ளமுடியாமல் போய்விட்டது.

சோழர்களின் ஆட்சிக்குப் பிறகு, தஞ்சை மராட்டிய மன்னர்களின் கட்டடக் கலையும், மதுரை நாயக்க மன்னர்களின் கட்டடக் கலையும் குறிப்பிடத்தக்கவை. தஞ்சையிலுள்ள அரண்மனையும், கலைக்கூடமும் மராட்டியக் கட்டடக் கலையின் சிறப்பை விளக்குகின்றன. மதுரையிலுள்ள திருமலை நாயக்கர் மகால், நாயக்கர் காலத்துக் கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

வட இந்தியாவில் அமைந்துள்ள கட்டடங்களுக்கும் தமிழ் நாட்டில் அமைந்துள்ள கட்டடங்களுக்கும் வேறுபாடுண்டு. தமிழகக் கோவில்களில் காணப்படுவதுபோன்ற சிற்பக் கலையழகை வட இந்தியக் கோவில்களிலோ கட்டடங்களிலோ