பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

கப்பட்டிருந்தன. அத்தூண்கள் கிடைத்தற்கரிய உயர்ந்த மரங்களால் செய்யப்பட்டவை; மழமழப்பாக இழைக்கப்பட்டுச் சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டவை. இவ்வரண்மனைகளில் இணைக்கப்பட்டிருந்த கதவுகள் வெள்ளியினாலும் தங்கத்தினாலும் இழைக்கப்பட்டிருந்தன. இடையிடையே வைரக்கற்களும், மரகதக்கற்களும், கெம்புக் கற்களும் பதிக்கப்பட்டிருந்தன. அரண்மனையின் தளங்களும் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடியிருந்தன. மேல் விதானங்களில் இயற்கைக் காட்சிகள் தீட்டப் பெற்றிருந்தன. மலைகளும், அருவிகளும், சோலைகளும் அங்குக் காட்சியளித்தன. வன விலங்குகளை வேட்டையாடுவது போன்ற காட்சிகளும் வரையப்பெற்றிருந்தன. அரசன் வீற்றிருந்து. ஆட்சிபுரியும் அத்தாணி மண்டபத்தில் வரிசையாக இடப்பட்டிருந்த இருக்கைகள் யாவும் உயர்ந்த மரத்தால் சிற்பக்கலையழகோடு செய்யப்பட்டவை.

அரண்மனைகள் மிகவும் பெரிய அளவில் கட்டப்பட்டன. அவ்வாறு கட்டப்பட்டதற்குக் காரணமுண்டு. ஒவ்வொரு மன்னனுக்கும் பல மனைவியர் இருந்தனர். ஒரு சில மன்னருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தனவாம். இவ்வளவு பெரிய குடும்பம் வாழ வேண்டுமானால் அரண்மனையைச் சிறிதாகவா கட்ட முடியும் ?

அரண்மனையில் அன்றாட வேலைகள் செம்மையாக நடைபெறுவதற்கு நூற்றுக் கணக்கான அடிமைகள் அமர்த்தப்பட்டனர். அரண்மனையில் வாழும் அரச குடும்பத்தை மகிழ்விக்க இசைக்குழு