பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4. தாஜ்மகால்

இந்திய நாட்டில் மாபெரும் நகரங்கள் பல உள்ளன. அவற்றுள் ஆக்ரா நகரை அறிந்த அளவு, வேறு எந்த நகரையும் உலக மக்கள் அறிந்தார்களல்லர். காரணம் ஆக்ரா நகரம் அழகின் இருப்பிடம்; கலையின் நடுவிடம். இந்திய நாட்டில் எத்தனையோ அரச பரம்பரையினர் அரியணை ஏறி ஆட்சி புரிந்திருக்கின்றனர். அவர்களுள் மொகலாயர்களின் ஆட்சி ஈடு எடுப்பற்றது ; செல்வச் சிறப்புக்கும், ஆடம்பரத்துக்கும், கலைக்கும் பெயர் பெற்றது, மொகலாயர்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் மாபெரும் மசூதிகளையும், கோபுரங்களையும், கலைச்சிறப்போடு கூடிய பளிங்குச் சமாதிகளையும், கண்கவர் பூங்காக்களையும் நிறுவினர். அவை யாவும் மொகலாய மன்னர்களின் பெருமையைப் பறைசாற்றிய வண்ணம் இன்றும் தலை நிமிர்ந்து நிற்கின்றன.

இச் சிற்பச் செல்வங்களுக்குப் புகழ் பெற்ற இடம் ஆக்ரா நகரமாகும். இந்நகரின் நடுநாயகமாக யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள தாஜ்மகால் ஈடு இணையற்ற சிற்பக்கலையின் சின்னமாக விளங்குகிறது. உலக விந்தைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. ஐரோப்பிய மக்களின் உள்ளத்தில் இஃது ஓர் அரிய கலைக் கோவிலாக இடம் பெற்று விட்டது. இப்பளிங்குச் சமாதியைக் காணும் மக்கள் எல்லாரும் மூக்கின்மேல் விரலை வைத்து வியப்புடன் நோக்குகின்றனர். தாஜ்மகால்