பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

எழுதிய அமைப்பின்படியே தாஜ்மகால் கட்டப்பட்டது. இக்கட்டட வேலைக்காகச் சிற்பிகள் பாக்தாத் நகரிலிருந்து வரவழைக்கப்பட்டனர். சமர்க்கண்டிலிருந்து வளைவுக் கோபுரம் அமைக்கும் கலையில் வல்ல சிற்பிகள் வரவழைக்கப்பட்டனர். பளிங்குக் கல்லில் பூவேலைப்பாடு செய்யும் கலையில் மிகவும் கைதேர்ந்தவனான சிற்பியொருவன் சிராஸ் நகரிலிருந்து வரவழைக்கப்பட்டான். எனவே, இசுலாமிய உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் தாஜ்மகாலைக் கட்டச் சிற்பிகள் வரவழைக்கப்பட்டனர் என்பது தெளிவாகும்.

மும்தாஜின் சமாதி வெள்ளைப்பளிங்குக் கற்களால் ஆனது. அவ்வழகு மணிமாளிகையைச் சுற்றிக் கண்ணைக் கவரும் வண்ணமலர்கள் பூத்த பரந்த பூஞ்சோலையொன்று உள்ளது. அப்பூஞ்சோலை, அழகின் இருப்பிடம். அங்கே குளிர் நிழல் தங்கும் பசுமரங்கள் உண்டு. அப்பசு மரங்களைச் சுற்றிப் படர்ந்து பூங்கொடிகள் தலையை ஆட்டிச் சிரிக்கும். மரகதப் பாய் விரித்தாற் போன்று எங்குப் பார்த்தாலும் பசும் புற்றரைகள் தென்படும். திரும்பிய திசையெல்லாம் செயற்கை நீர் ஊற்றுக்கள் தம் உடலையசைத்துக் களிநடம் புரியும்.

இச் சோலையின் நுழைவாயில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வெள்ளைப் பளிங்குக் கற்களாலும், செந்நிறப் பளிங்குக் கற்களாலும் அமைக்கப்பட்டது. இவ் வாயிலில் நுழைந்து, சோலையின் நடுவே நீண்டு செல்லும் கண்கவர் பாதையின் வழியே சென்று சமாதியை அடையவேண்டும்