பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

‘கல்லால் எழுந்த காவியம்’ என்று நம் நாட்டவராலும், மேலை நாட்டறிஞராலும் போற்றப்படும் இக் கலைக்கோவிலின் சிறப்பை, வந்த புதிதில் ஆங்கிலேயர் உணரவில்லை. தமது குடியேற்ற நாடான இந்திய நாட்டின் செல்வத்தைச் சுரண்டுவதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்த ஓர் ஆங்கிலக் கவர்னர் ஜெனரல், தாஜ்மகாலைப் பிரித்து அதன் சலவைக் கற்களை விலைக்கு விற்றுப் பணமாக்க விரும்பினார். வெளிநாட்டு நிறுவனம் ஒன்றனுக்கு நூற்றைம்பதாயிரம் ரூபாய்க்கு ஏலத்திலும் விற்றுவிட்டார்.

இக் கொடுஞ் செயலை உணர்ந்த இந்திய மக்கள் கொதித்தெழுந்தனர். நாட்டில் கிளம்பிய பேரெதிர்ப்பைக் கண்ட அவ்வாங்கில ஆளுநர் பிறகு அத்திட்டத்தைக் கைவிட்டார். நல்ல வேளை! தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு போயிற்று. அன்று மட்டும் இந்திய மக்கள் உணர்ச்சியற்றவர்களாக இருந்திருப்பார்களேயானால், தாஜ்மகாலினால் நாம் இன்று அடைந்திருக்கும் கலைப்புகழ் மண்ணோடு மண்ணாயிருக்கும்.

தாஜ்மகால் கட்டப்பட்டு முந்நூற்றுப் பதினாறு ஆண்டுகள் ஆகின்றன. இதைக் கட்டும் பணியில் எவ்வளவு பேர் ஈடுபட்டார்களோ, அதைவிட இதை அழியாமல் காக்கும் பணியில் மிகப் பெரும் தொகையினர் ஈடுபட்டுள்ளனர். இப்பெரும் கலைச் செல்வத்தை இந்திய நாட்டுத் தொல்பொருள் ஆராய்ச்சியினர் தம் கண்ணின் கருமணியாய்க் காத்து வருகின்றனர். இதைப் பாதுகாத்துப் பேண