பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

ஆங்கில அரசினர் இரண்டு லட்சம் ரூபாய் செலவிட்டனர். இந்திய நாடு விடுதலை பெற்ற பின்னர், நமது அரசியலார் பதினாறு இலட்சம் ரூபாய் செலவிட்டுள்ளனர். ஆங்கில அரசியலார் கி.பி. 1810ஆம் ஆண்டிலும், 1864 ஆம் ஆண்டிலும், 1874 ஆம் ஆண்டிலும் இதைப் பழுது பார்த்தனர்; கி. பி. 1930 ஆம் ஆண்டில் இந்திய நாட்டுக் கட்டடக் கலைஞர்களையும், பொறியியல் வல்லுநர்களையும் ஒன்று கூட்டி ஒரு குழு அமைத்துத் தாஜ்மகாலை நன்கு ஆராய்ந்து பழுது பார்த்தனர். இந் நிகழ்ச்சிகள் யாவும் ஆங்கிலேயரின் ஆட்சிக் குறிப்புகளில் காணப்படுகின்றன.

தாஜ்மகாலின் அழகுச் சிறப்புக்குக் காரணமாக விளங்குவது அதைச் சூழ அமைந்திருக்கும் சொக்குப் பச்சைத் தோட்டமே. இத் தோட்டம் உயர்ந்ததும், குட்டையானதுமான பசிய மரக் கூட்டங்களைத் தன்னகத்தே கொண்டது. குலுங்கிச் சிரிக்கும் கொத்து மலர்ச் செடிகளையும், பொங்கிப் பாயும் செயற்கை நீரூற்றுக்களையும் எங்கணும் கொண்டது. இவ்விள மரக்காவின் நடுவில், தன் பளிக்குருவம் காட்டித் தலை நிமிர்ந்து நிற்கும் இக் கலைக்கோவில், பச்சைக் கம்பளத்தின் நடுவே கொட்டி வைத்த முத்துக் குவியல் என்று சொன்னால் மிகப் பொருத்தம். இப் பசுமைச் சூழல் தாஜ்மகாலின் அழகைப் பன்மடங்கு பெருக்கிக் காட்டத் துணைபுரிகின்றது.

ஆங்கில ஆட்சியின் போது அறுபதாண்டுக் காலம் இத் தோட்டம் கவனிப்பாரற்று அழிந்து கிடந்தது. இத்தோட்டம் அழிவுற்றதும் தாஜ்-

5