பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 கட்ட பொம்மு கூத்து
(கதைப் பாடல்)
முன்னுரை

கட்டபொம்மு பற்றி கோவில்பட்டி தாலுக்காவில் வழங்கும் கதைப்பாடல்களும், கூத்துப்பாடல்களும், கும்மிகளும் ஏராளம். இவற்றில் கதைப்பாடல் ஒன்றை 1961ல் நான் பதிப்பித்துள்ளேன். நியூ செஞ்சுரி வெளியீட்டாளர் அதனை வெளியிட்டனர். அதற்கு நீண்டதோர் முன்னுரை எழுதினேன். அதில் கதைப்பாடல்கள் பற்றியும், வரலாற்று கதைப்பாடல்கள் பற்றியும், கட்டபொம்மு கதை வழங்கிவரும் உருவங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளேன்.

இந்த நூல் இப்பொழுது கிடைக்காததால் மதுரைப் பல்கலைக் கழகம் வெளியிடும் "கட்டபொம்மு கதைப்பாடல்" என்ற நூலில் அம் முன்னுரையை முழுவதும் வெளியிட்டு, வேறு சில செய்திகளையும் சேர்த்திருக்கிறேன்.

இந்த நூலைப் படிப்பவர்கள் இவ்விரு நூல்களையும், அவற்றின் முன்னுரைகளையும் படிக்கவேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.

ஆயினும் சரித்திரக் கதைப்பாடல்களைப் பற்றிய சில முக்கிய பொருள்களை அறிந்து கொள்ளுவதற்காக அம் முன்னுரையின் ஓர் பகுதியைக் கீழே தருகிறேன்.

கதைப்பாடல்களில் காணப்படும் சரித்திரக் கதைகளில் முக்கியமானவை, தேசிங்கு ராஜன் கதை, கட்டபொம்மன் கதை, மருதுபாண்டியர்கதை, கான்சாகிப் சண்டை, பூலுத்தேவர் சிந்து, ராமப்பய்யன்கதை முதலியவை. இவ்வரலாற்று வீரர்களின் சரித்திரங்கள் பலவகையான உருவங்களில் நாட்டுக் கதைப் பாடல்களாக வழங்கி வருகின்றன. இக்கதைகளில் சரித்திரத்தை நாம் உழைக்கும் மக்களின் கண்ணோட்டத்தில் காண்கிறோம். சரித்திர வீரர்களின் சிறந்த பண்புகளை இக்கதைகள் போற்றிப் புகழ்கின்றன. கட்டபொம்மு, மருது சகோதரர்கள் முதலிய வெள்ளையர்களை எதிர்த்த வீரர்களின் சரித்திரங்களை வழிவழியாக கதைப்பாடல்கள் மூலம் அறிகிறோம். உண்மை வரலாற்றைத் திரித்துத் தங்களுக்குச் சாதகமாக எழுதி வைத்துள்ள