பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

 இக்கூத்து தெலுங்குபேசும் மக்கள் முன்னால் நடைபெறுவதால் இடையிடையே தெலுங்கில் கதாபாத்திரங்கள் பாடுகின்றனர். இடையிடையே தெலுங்குப்பாடல்கள் வருவதை தெலுங்குபேசும் மக்கள் பெரிதும் ரசிப்பார்கள்.

    கதை நிகழ்ச்சிகளில் சில மரபுப் பாடல்கள் சிலவற்றிலிருந்து (traditional folk ballads) மாறுபடக் கூறப்பட்டுள்ளன. அவற்றை அடிக்குறிப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளேன்.
    இக்கதைப்பாடலை எழுதுவதற்கு கூத்து நடத்துவோர் எழுதி வைத்திருக்கும் கதைப்பாடல்களும், பழைய அச்சுப்பிரதியொன்றும், ஓர் ஏட்டுச் சுவடியும் துணை செய்தன.
    இப்பாடல் சுதந்திர இயக்கம் தோன்றிய பின் எழுதப்பட்டதாலும், தமிழ்நாட்டில் வ. உ. சி. யின் போராட்டங்கள் நடைபெற்றபின், அந்த எழுச்சியின் தாக்கம் கிராமமக்களிடையே பரவிய பின் இப்பாடல் எழுதப்பட்டதாலும், கட்டபொம்மு சக்க தேவியை மட்டுமல்லாமல் பாரத நாட்டைப் பற்றியும் பேசுகிறான்.
    சில விடங்களில் வெள்ளையரைப் புகழ்ந்து பேசுகிற இடங்களைக் காணலாம். இதற்குக் காரணம் வெள்ளையர் காலத்தில் கட்டபொம்மு நாடகத்தை நடிக்கவும் பாட்டைப்பாடவும் தடையிருந்ததுதான், போலீசார் காதில் படும்படி, கட்டபொம்மனைச் சில விடங்களில் திட்டுவதும், வெள்ளைக்காரர் ஆட்சியைச் சில விடங்களில் புகழ்வதும் போலீசாரை ஏமாற்றி நாடகத்தை நடத்தவும், பாட்டைப்பாடவும் முடிவதற்காகவே. பொதுவாக அவனை வீரனென்று கருதியவர்கள்தான் அவனைப் பற்றிப்பாடி அவனது நினைவை நிலைக்கச் செய்துள்ளனர்.
    வெள்ளையர் கட்டபொம்முவின் நினைவை அகற்றச் செய்த முயற்சிகள் பல. அவனது கோட்டையை அழித்தார்கள். கோட்டையிருந்த நிலத்தில் வீடுகட்ட அனுமதிக்கவில்லை. அவ்விடத்தைப் பாழ்நிலம் என்று ஆவணங்களில் குறிப்பிட்டார்கள். கட்டபொம்மன் கதையைப் பாட அனுமதி மறுத்தார்கள். அதே சமயம் கட்டபொம்மனுக்கு எதிராகப் போராடிய வெள்ளை ராணுவ அதிகாரிகள் எழுதிய நூல்கள் வெளியிடப்பட்டன. அவை ′சரித்திரம்′ என்ற அந்தஸ்தைப் பெற்றன. ஆனால் இத்திரிபான வரலாறுகள் மக்களிடையே பரவவில்லை.
   வெள்ளையர் போராட்டத்தில் உயிர் நீத்த கட்டபொம்மூவையும், ஊமைத்துரையையும் மக்கள் நினைவில் வைத்திருந்தனர். இரவில் கும்மியடித்து அவர்கள் வீரத்தைப் பாடினர்.