பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97

திரு. பண்டித வேங்கடசாமி நாட்டார் அவர்களின் உரையும் வெளி வந்துள்ளது.

இதுகாறும் கூறியவற்றால், ஆசிரியர் அருமையையும், அந்நூலுக்குரிய் உரையின் சிறப்பினையும் கண்டோம். இனிச் சிலப்பதிகார நூல் நயம் ஒன்றை மட்டும் இங்குக் காட்டுவோமாக.

இளங்கோ அடிகளார் கதைப்போக்கிற்கேற்பக் கருத்துக்களைக் கவினுறச்சொல்லிச்செல்லும் திறன் பாராட்டற் குரியது. பாண்டியன் நெடுஞ்செழியன் ஆய்ந்தோய்ந்து பாராமல் கோவலனைக் கொலைக் குற்றத்திற்கு ஆளாக்கினன். அதனால், நீதிநெறி தவறாது செங்கோல் செய்துவந்த பாண்டியர் பெரும் பழி உண்டாயது. வளையாத செங்கோல் கொடுங் (வளைந்த) கோலாயது. அப்படிக் கொடுங்கோலானதை நிமிர்த்துச் செங்கோல் ஆக்கவேண்டியது தன் பொறுப்பென உணர்ந்த செழியர் பெருமான், அதற்குப் பரிகாரமாகத் தன் உயிரையே ஈந்தனன். இந்த இடத்தை இளங்கோவடிகள் எத்துணை அழகுறக் கூறியுள்ளார் என்பதைப் படிக்குந்தோறும், படிக்குந்தோறும் கவிஞரின் புலமைத் திறன் நன்கு புலனாகிறது.

“வல்வினை வளைத்த கோலை மன்னவன்
செல்லுயிர் கிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது ”

என்னும் இவ்வீர் அடிகளே முன்பு விளக்கப்பட்ட பொருட் சிறப்புப் பொதிந்துள்ள அடிகள். இவ்வாறு சுவை பயக்கவல்ல தொடர்களும் அடிகளும் சிலப்பதிகாரத்தில் எண்ணில் அடங்காதனவாக் உள்ளன. அவற்றை நும் அறிவு கொண்டு அலசி எடுத்து அறிந்து இன்புறுவீர்களாக. ஈண்டும் பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் போல ஒன்றே காட்டப்பட்டது.

க - 7