பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

101

 பெற்றுள்ளதோ, அங்ஙனமே இவர் யாத்த பாடலும் மஸ்தான் சாயபு பாடல் என்னும் பெயரினைப் பெற்று விளங்குவதாகும். இப்பாடல் நூலேயன்றி நந்தீசர் சதகம், அகத்தீசர் சதகம் என்ற பெயரால் இரு நூல்களையும் பாடித் தமிழ் அன்னையை அலங்கரித்துள்ளார் என்பர்.

குலாம் காதிர் நாவலர் என்பாரும், புலவர் ஆற்றுப்படை பாடிய குலக் கவியே ஆவர்.

இன்னோரன்ன அருந் தமிழ் இஸ்லாம் இனத்துப் புலவர்கள் தமிழ் அன்னைக்குப் புரிந்த தமிழ்ப் பணியினை யாரேனும் பாராட்டாமல் இருக்க ஒண்ணுமோ ? ஒண்ணாது.

இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் மட்டும் தாம் தமிழ் மொழியினிடத்து அன்பும் ஆதரவும் காட்டி வந்தனர் என்று கூற இயலாது. பல இஸ்லாமிய வள்ளல்களும் தமிழ் மொழியினையும் சைவத் தமிழ் புலவர்களையும் ஆதரித்து இருக்கின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக ஒன்றினை ஈண்டுக் குறிப்பிடுவோமாக.

ஷெய்கு அப்துல் காதர் மரைக்காயர் ஒரு பெரும் இஸ்லாமியப் பெரியார். இவரைப் பெரிய தம்பி மரைக்காயர் என்றும் அழைப்பர். இவரே சீதக்காதி என்று சிறப்பித்துக் கூறப்படும் சீரிய வள்ளல். இவருக்கும் படிக்காசுப் புலவர்க்கும் நெருங்கிய நட்பு இருந்தது என்பதைச் சீதக்காதி மறைவு குறித்துப் படிக்காசுப் புலவர் பாடியுள்ள கையறுநிலைச் செய்யுட்களால் நன்கு அறியலாம். படிக்காசுப் புலவர் மறந்தும் புறந்தொழா மாந்தர். மேலும் பெரியபுலவர். அவர் தம் கவியின் சிறப்பினை,