பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தரையில் புலித் தோலாசனமிட்டு உட்கார்ந்து, தம்மைச் சூழ்ந்துள்ள மக்களுக்கும் ஏனைய சீடர்களுக்கும் சமய போதனைகள் செய்துவந்தார். தமிழ் மக்களிடையே சமயப் பணி ஆற்றுவதற்கு உறு துணையாயிருப்பது, அம்மக்களின் தாய்மொழியாகிய தமிழ் மொழி என்பதை ஊகித்தறிந்து, தமிழ் மொழியைப் பயிலத் தொடங்கினர்.

வீரமாமுனிவர் இரண்டு தமிழ் இளைஞர்களைத் தம் இடத்தில் தொழிலாளராக அமைத்துக் கொண்டு, அவர்கள் சமைத்த உணவை ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உண்டுவந்தார். முதன் முதலில் முனிவர் இந்து தர்ம சாஸ்திரங்களை நன்கு பயின்று, பல்வேறு தமிழ் நாடுகளுக்குஞ் சென்று, அவண் வாழும் மக்களின் நடையுடை பாவனைகளையும் அறிந்து கொண்டார்.

முனிவர் முதன்முதலாகத் தென்னாற்காடு ஜில்லா கோனான்குப்பம் என்னும் சிற்றுாரில் தேவாலயம் ஒன்றைக் கட்டுவித்தார். முனிவர் இவண் வசித்த மக்களுக்குக் கிறித்தவப் போதனைகளே உபதேசித்து, பலரைக் கிறிஸ்தவர்களாகச் செய்தார்; ஒவ்வொருவர் இல்லத்திற்கும் சென்று, இயேசு கிறிஸ்துவின் பொன் மொழிகளை அன்புடன் போதித்து, அவர்களனைவரையும் கிறித்தவ வழிபாட்டில் திளைக்கச் செய்தார். மேலும், தமிழ் அணங்கு அணியும் உடையுடன், இயேசு நாதராகிய குழந்தையைக் கையிலேந்தியவண்ணம் கன்னிமேரி அம்மையாரின் திருவுருவத்தை வரைந்து, அவ்வோவியத்தைத் தாம் ஏற்படுத்திய தேவாலயத்தில் பிரதிட்டை செய்துவைத்தார் : அவ்வம்மையார்க்குப் ‘பெரியநாயகி அம்மாள்’ என்னும் திருப்பெயரிட்டு, பதினைந்து தோத்திரப் பாடல்களையும் பாடித் திரு விழா நடத்தினார்.