பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121

 உழவர்கள் இன்னோர் அன்ன பண்புடையகாளைகளைப் பெறுதற்கு அரசாங்கம் துணைபுரிய வேண்டும் என்பதைத் தேவர் சொல்லாமல் சொல்லிக் காட்டுகிறார், இத்துடன் நில்லாமல், அரிசிப் புல் ஆர்ந்து என்னும் தொடரால், யார் ஒருவர் உள்ளம் உவக்க உழைத்துப் பாடுபடுகின்றனரோ, அவர்கள் தாமும் உண்டு பிறரையும் உண்ணச் செய்யும் பேருபகாரியாவர் என்பதையும் காளைகளின் குணங்களினின்றும் குறித்துக் காட்டுகின்றார். இன்னமும் இதன்பால் உள்ள நய முடைப் பொருளை நன்கனம் ஒர்ந்து சுவைப்பீராக.

இங்ஙனம் இயற்கை வளனும் செயற்கை நலனும் ஒருங்கே அமையப் பெற்ற நாட்டில் அன்பும் வீரமும் குடிகொண்டு நிலவும். இவை நிலவப் பெற்ற நாட்டை எவரும் விரும்புவர். 'மண்ணவரே அன்றி விண்ணவரும் விழைவர்', என்பது அறிஞர்களின் கருத்தாகும். நம்தேவர்பெருமானார் இதனைச் சுட்டிக் காட்டுகின்றார். அப்படிச்சுட்டும் போது ஒர் அழகும் பொலிய அமைத்துக் காட்டுகின்றார், புலவர்கள் கற்பனைக் களஞ்சியம் என்பதை எவராலும் மறுக்க இயலாது. அம் முறையில் வானவர் கண் இமையாமல் இருத்தற்கும் தற்குறிப்பேற்ற அணியாகப் பல காரணங்களைக் காட்டுவர். ஈண்டுத் தேவர் காரணம் காட்டும் வகை அருமைப்பாடுடையது. அவ்வருமைப் பாடு நாட்டின் சிறப்பு கனிமிகச் சிறப்பதற்காகவே கூறும் கூற்றாகும்.

'விண்ணவர்க்கு யாதொரு குறைவும் தம் விண்ணுலகில் இல்லாதிருந்தும், ஏமாங்கத காட்டில் அமைந்துள்ள செல்வப் பெருக்கையும், வீரப் பண்பையும், கண்டு அங்காட்டை இமை கொட்டாது நோக்குதலால்தான் கண் இமைத்திலர்' என்று தேவர்.தீட்டும் ஒவியம் எத்துணை இன்பம் பயக்க வல்லதாக இருக்கிறது பாருங்கள்!