பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

நான் மறக்கினும் சொல்லுகா நமச்சிவாயவே” என்று கூறியுள்ளார். இவ்வாறு சிந்தித்தலாகிய ஒழுக்க நெறியில் மக்கள் ஒழுக வேண்டும் என்பதே வள்ளுவர் கருத்து. இவ்வொழுக்க நெறியில் நின்றவர் நீடுவாழ்வர் என்று, இப்பண்புடையார் வாழ்க்கையின் நீட்டிப்பினே அறிந்து பேசினர். இப்பண்பினர் பருவுடல் நீங்கினும், அவர்களது நுண்ணுடல் பெருமையும் பண்பும் இன்றும் இவ்வுலகில் பேசப்படுதலே அவர்கள் நீடுவாழ்கின்றார் என்பதற்கு எடுத்துக் காட்டாகும்.

இறைவன் நமக்குக் கை கால் முதலான உறுப்புக்களைக் கொடுத்ததன் காரணம், உடுப்பதற்கும் உண்பதற்கும் உலக வாழ்க்கையில் உறைவதற்கும் மட்டும் அன்று. அவ்வுறுப்புக்களைக் கொண்டு இம்மைப் பயனைத் துய்த்தலோடு அம்மைப் பயனையும் எய்தற்கும் பாடுபடுதல் வேண்டும். அம்மைப் பயனை எதுபோது பெறலாம்? ஆண்டவனால் கொடுக்கப்பட்ட உறுப்புக்களை அவன் பொருட்டே பயன் படுத்தினால் தான் பெற இயலும், இதனை வள்ளுவனார், தலையினை பெற்றும் எவர்க்கும் தலைவனும் இறைவன் தாளை வணங்கவில்லை என்றால், அந்தத் தலையினைப் பெற்றுப் பயன் இல்லை ஆகவே, தலையால் அவன் தாளை வணங்குதல் வேண்டும் என்று கூறிய வள்ளுவர்வாக்கின் உண்மைப் பொருளை உணர்ந்த பரிமேல் அழகர் தலையால் வணங்கினால் மட்டும் போதாது என்பதை விளக்கக் “காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயனில எனத் தலைமேல் வைத்துச் சொல்லினும், இனம் பற்றி வாழ்த்தாத நாக்களும் அப்படியே பயனிலவாம். என்க” என்று கூறிப்போந்தனர். ஆளுடைய அரசராம் அப்பர் பெருமானாரும் திருவங்கமாலையில் “தலையே! நீ வணங்காய், கண்காள் காண்மின்களோ, செவி-