பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

உள்ளநிறை கலைத்துறைகள் ஒழிவின்றிப் பயின்றவற்றால் தெள்ளவடித் தறிந்தபொருள் சிவன் கழலில் செறிவென்றே கொள்ளுமுணர் வினில்முன்னே கூற்றுதைத்த கழற்கன்பு பள்ளமடை யாய்என்றும் பயின்றுவரும் பண்புடையார்

என்று பாடியருளிய பாட்டினையும் ஈண்டுப் படித்துப் பரவச முறுதல் சாலப்பயன் தருவதாகும்.

வள்ளுவனார் கடவுள் தன்மைகளையும் அக்கடவுளை அடைந்து பெறதத்க்க இன்பத்தினையும் கடவுளை எப்படியும் போற்றியே ஆதல்வேண்டும் என்பதையும் கூறியருளினார் எனக் கூறினோம். இனி, வள்ளுவனார் கடவுள் உண்டு என்பதை எப்படி நிலைநாட்டினார் என்பதைக்கூறி இக்கட்டுரையைமுடிப்போமாக.

வள்ளுவனார் கடவுளை நம் கண்முன் கொண்டு வந்து காட்ட முன்வந்திலர். கடவுள் ஒருவர் உண்டு என்பதை உதாரண வாயிலாகக் காட்டவே முனைந்து நின்றனர். புகை கண்ட இடத்து ஆண்டு நெருப்பு உண்டு என்று அறிவதுபோல, உலகத்தினைக் கண்டபோது இவ்வுலகத்திற்கு முதற் காரணமான ஒரு பொருள் இருக்க வேண்டும். அதுவே கடவுள் என்ற கருத்தில் “ஆதிபகவன் முதற்றே உலகு” என்று உலகிற்கு முதற் காரணன் கடவுள் என்பதைக் கூறினர். இந்தத் தொடர்க்கு விளக்கம் கூறவந்த பரிமேல் அழகரும் “காணப்பட்ட உலகத்தைக்கொண்டு காணப்படாத கடவுளுக்கு இருப்பைச் சொல்ல வேண்டுதலின், ஆதி பகவன் முதற்றே என்று உலகின்மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும் உலகிற்கு முதல்வன் ஆதி பகவன் என்பது கருத்தாகக்கொள்க” என்று எழுதிப் போந்தனர். ஆளுடைய அடிகளாம் மணிமொழியாரும் “ஞாலமேகரியாக நானுனை நச்சி நச்சிட வந்திடும்” என்று இந்த உண்மையினை அறிந்து பாடியுள்ளார். ஆகவே, கடவுள் உண்டு என்பதை வள்ளுவர் எடுத்துக்காட்டின் மூலம் கூறியருளினார் என்பதை உணர்வோமாக.