பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

கொடுத்து” என மாண்புற மடலை வரைந்தனர். இந்த அளவிலும் திருமுகப் பாசுரத்தினைத்தீட்டி முடிக்காது, இறுதியில் “வர விடுப்பதுவே” என்று வரைந்து முடித்துள்ளதை என் சிற்றறிவு கொண்டு என்னென்று செப்ப வல்லேன்? ஆ! “வர விடுப் பதுவே” என்னும் செழும் தொடரைப் பன்முறையும் பன்னிப் பன்னிச் சிந்திக்க வேண்டியவராகின்றோம். இத்தொடரின் ஆழ் பொருள் அமைப்பினை அனுபவிக்க வேண்டியவராகின்றோம்.

பாணபத்திரர் யாழ் இசையில் வல்லவர். அத்துடன் இறைவர்தம் அன்பை எய்தப் பெற்றவர்; மேலும் இறைவரால் அனுப்பப்பட்டவர். இன்னோரன்ன சிறப்புடைய சீரியரைச் சின்னாளேனும் உடன் வைத்து உவகையும் உறவுங் கொள்ள வேண்டும் என்று உளங்கொண்டு, சேரர் பெருமானார் பாணபத்திரரை நிறுத்திக் கொள்ளாதிருக்கும் பொருட்டே “வர விடுப்பதுவே” என்றனர். நாளும் யாழிசை கேட்டு இன்புறும் இறைவர், யாங்ஙனம் பாணபத்திரரைத் தணங்திருப்பார்? ஏழிசையாய், இசைப்பயனாய் இருப்பவர் இறைவர். ஆகவே, உடனே பொருள் தந்து அனுப்பி வைக்க உளங்கொண்டே “வர விடுப்பதுவே” என்று கட்டளையிட்டருளினர். இத்தகைய மாண்பொருள் பலவும் மாண்புறப் பெற்ற இத்திருமுகப் பாசுரத்தினைப் பலகாலும் பயின்று இன்பத்தினைத் துய்த்து வாழ்தல் நம்கடமையாகும்.