பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைவாணன் கோவை, திருவாரூர்க்கோவை என்னும் பெயர்களால் இவ்வுண்மையை நன்கு உணரலாம். இவ்வாறே ஏனைய கோவை நூல்கள் விளங்குவதைக் காணலாம். இவ்வாறு பாட்டுடைத் தலைவன் பெயரையோ தலத்தின் பெயரையோ சார்த்தி வழங்கப்பெறாமல் கோவை, என்று கூறியதும், இன்ன கோவை என்றுணரப்பெறாமல் திகைக்க நேரிடும். ஆனால், திருக்கோவையார் என்று கூறிய அளவில் நமக்கு வேறு கோவை நூல்களில் எண்ணம் செல்லாமல், திருச்சிற்றம்பலக் கோவையின்மீதே செல்லும் என்பதை எவரும் மறுக்க இயலாது. இதன் ஈடும் எடுப்பும் இல்லாப் பெருமையை முன்னே திரு என்னும் சொல்லையும், பின்னே ஆர் என்னும் உயர்வு சிறப்பு விகுதியையும் புணர்த்திக் கூறியதினின்றும் நன்கு உணரலாம். திரு என்னும் சொல்லுக்குப் பேராசிரியர் ‘கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம்’ என்று பொருள் கூறியதற்கேற்ப, இக் கோவையும் விளங்குதலின், ‘திருக்கோவையார்’ என்ற பெயருடன் இலங்குவதாயிற்று.

இந்நூலின் சிறப்பைப்பலபடப் புனைந்து கூறியுள்ளனர் புலவர் பெருமக்கள். தமிழில் ஒருவன் நல்ல புலமைபெற்றுத் திகழவேண்டின், மூன்று நூல்களைப் படித்துவிடின் போதுமானது என்பதை இலக்கணக் கொத்து ஆசிரியர் சுவாமிநாத தேசிகர் கூறும்போது.

“பல்கால் பழகினும் தெரியா உளவேல்
தொல்காப் பியம்திரு வள்ளுவர் கோவையார்

மூன்றினும் முழங்கும்”

என்று கூறிப் போந்தனர். தொல்காப்பியம், திருக்குறள் நூல்களோடு ஒருங்குவைத்து எண்ணப்படும் நூல் திருக்கோவையார் என்று இலக்கணப் பேர் ஆசிரியர் இயம் பின், இதற்குமேல் இதன் மாண்பை இயம்பவும் வேண்டுமோ?