பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

 என்று ஒரு புலவர் இம்முறையில் அறுதியிட்டு உறுதியாகக் கூறியிருப்பரோ ?

திருக்கோவையார் பாடிய ஆசிரியர் யார்?

இந்த வினாவும் எழுதற்கு இடனுண்டா என்று சிலர் ஐயுறலாம். ஆம் எழுதற்கு இடனுண்டு. வாதவூர் சிவபாத்தியன் பாடியது என்பது சிலர் கருத்து, தொன்றுதொட்டுப் பரம்பரையாக எவரும் கூறிக் கொண்டு வருவது திருக்கோவையாரைப்பாடியவர் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் என்பதாகும். நூல் வழக்கும் இதனை நன்கனம் வலியுறுத்தும்.

‘’தேனு றும் வாசகங்கள் அறுநூறும் திருக்கோவை
நானூறும்.அமுதூற மொழிந்தருளும் நாயகனை
வானு றும் கங்கைநிகர் மாணிக்க வாசகனே
யானுாறு படாதவகை இருபோதும் இறைஞ்சிடுவேன்

என்று செவ்வந்திப் புராணமும்,

"சிற்றம் பலக்கோவைத் தேன்சொரியும் செம்முகிலை
மற்றொப் பிலாததிரு வாசகத்தின் வாரிதியைக்
கற்றைச் சடையான் கருத்துருக்கும் காதலனைக்
கொற்றத் திருவாத வூரனைக்கை கூப்புதுமே.;

என்று திருவெண்காட்டுப் புராணமும், அறிவிப்பதினின்றும் அறியலாம். இக்காரணங்களால் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகரே திருக்கோவையாரைப் பாடினார் என்பதை அறிந்தோம். ஆனால், இவை அனைத்தும் புறச்சான்றுகளாகும். அகச்சான்றுகளாலும் இக்கருத்தை நன்கு வலியுறுத்தலாம். அதனையும் ஈண்டு நோக்குவோமாக.

அத் திருவாசகத்தில் காணும் சொல்லும்,பொருளும், திருக்கோவையாரில் ஆங்காங்குச் சிதறிக் கிடக்கின்றமையின், அவற்றை எடுத்துக் காட்டின் மணிமொழியாரே திருக்கோவையார்க்கும் ஆசிரியர் என்பது வெள்ளிடைமலை என விளங்கும் என்க. திருக்கோவையாரில், வழி விதைல் என்னும் துறை கூறும் பகுதியில்,