பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மணிமொழியார் கூறிய தலைவனுடைய தன்மைகளையும் தலைவியின் பண்புகளையும் முதலில் சிந்திப்போமானால், அவர்கள் வாழ்க்கை பின்னால் எவ்வாறு சிறந்து விளங்கி இருக்கும் என்பது நன்கு தெரியவரும்,

தலைவன் தன்மை

“காரணி கற்பகம், கற்றவர் நற்றுணை, பாணர்ஒக்கல்
சீரணி சிந்தா மணி அணி தில்லைச் சிவனடிக்குத்
தாரணி கொன்றையன், தக்கோர்தம் சங்க நிதிவிதிசேர்

ஊருணி உற்றவர்க்கு ஊரன்மற் றியாவர்க்கும் ஊதியமே”

என்னும் இப்பாடலில் தலைவனை மேகம், கற்பக விருட்சம், படித்தவர்களுக்கு நண்பன், பாணர்கட்கு உறவினன், சிந்தாமணி, கொன்றைமாலை, சங்கநிதி, ஊழ், ஊருணி என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கூறியதற்கு ஏற்ற காரணங்கள் உண்டு, மேகம் கைம்மாறு கருதாமல் பிறர்க்குக் கொடுக்கும் தம்மையுடையது. கற்பகம் வேண்டியபோது வேண்டுபவர் வேட்கைக்கேற்பக் கொடுக்கவல்லது. நினைத்ததைத் தருதலில் சிந்தாமணி நிகர் அற்றது. அவரவர்கட்கேற்பப் பயன் கொடுக்கவல்லது விதி. பொதுக்குளமோ, கிணறோ எவர்க்கும் நீரை ஈந்து இன்புறத்தக்கது. இங்ஙனம் உவமிக்கப்பட்டவற்றின் பண்புகள் இத்தலைமகன்பால் பொருந்திக் கிடந்தமையின், அவனுக்குக் காரும், கற்பகமும், சிந்தாமணியும், சங்கநிதியும், விதியு நிகராயின. இவன். கல்வி அறிவில் சிறந்து விளங்கின மையால்கற்றவர்க்கு நற்றுணையாகவும், கல்வியறிவுக்கேற்பக் கடவுள் அன்பும் பெற்றவனாக விளங்கினமையால் சிவனடிக்குத்தார் அணர் கொன்றையனாகவும் திகழ்ந்தான். இங்ஙனம் தலைவனது தனிப்பெரும் பண்பை அங்கையில் நெல்லிக்கனியென அறிந்து கூறியவர் இதுவரையில் எவரேனும் உளரோ?