பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“கட்டுரைக் கதம்பம்” என்னும் இந்நூல் பல கட்டுரைகளைத் தன்னகத்துக் கொண்டிருத்தலின், இப் பெயருடன் வெளிவருவதாயிற்று. இந்நூலில் உள்ள கட்டுரைகள் யாவும் என்னால் பல்வேறு சஞ்சிகைகட்கும், ஆண்டு மலர்கட்கும் சில்லாண்டுகட்கு முன்பே எழுதப்பட்டவையாகும். சில கட்டுரைகள் யான் எழுதி வெளியிட்டுள்ள நூற்களினின்றும் எடுக்கப் பட்டவை. இத் தொகுப்பு நூல் எல்லாச் சமயத்தவர்களும் இனிது ஏற்றுப் படித்து, தமிழ் இலக்கியச் சுவையினைச் சுவைத்து இன்புறும் வண்ணம் தொகுக்கப்பட்டுள்ளது, உற்று நோக்குதற்குரியது. இந்நூலில் காணப்படும் கட்டுரையான வள்ளுவரும் கடவுள் வாழ்த்தும், என்பது குமரகுருபரன் என்னும் மாத சஞ்சிகையிலும் திருமுகப்பாசுரம் என்பது சைவ சித்தாந்த சமாஜ பொன்விழா மலரிலும், பத்துப் பாட்டின் பண்பு என்பது செந்தமிழ்ச்செல்வி என்னும் மாத சஞ்சிகையிலும், சேக்கிழாரும் கம்பரும், திருக்கோவையார் என்பன. ஞானசம்பந்தம் என்னும் மாத சஞ்சிகையிலும், கம்பன் கவியும் காகுத்தன் கணையும் என்பது இராம கிருஷ்ண விஜயம் என்னும் மாத சஞ்சிகையிலும், இனிய தமிழும் இஸ்லாமியமும், பெருமை என்பன புதுக்கல்லூரி ஆண்டு சஞ்சிகையிலும், தேவர் கண்ட நாடு என்பது சிந்தாமணி மலர் என்னும் சஞ்சிகையிலும், கொடைமடம்பட்ட கோமான் என்பது சங்ககால வள்ளல்கள் என்னும் நூலிலும், சிலம்பையாத்த சீர்சால் புலவர், வீரமா முனிவர் என்பன தமிழ்த் தொண்டர் என்னும் நூலிலும், மணிமேகலை பாடிய மாபெரும் புலவர் என்பது தொழிலும் புலமையும் என்னும் நூலிலும் வந்தவை.

இந்தக் கட்டுரைக் கதம்பமாம் இத் தொகுப்பு நூலைத் தமிழ் அறிஞர்கள் ஏற்று, என்னை இத்துறையில் மேலும் மேலும் ஊக்கி ஆக்கம் அளிக்க வேண்டுகிறேன்.

பாலூர் கண்ணப்ப முதலியார்.