பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

அந்நிலையில் இருவர் ஆணும் பெண்ணுமாகச் சேய்மையிலிருந்து தன் திசைநோக்கி வருதலைக் கண்டாள். கண்டதும் தன் மகளும், மகளை அழைத்துச்சென்ற மருகனும் தாம் மீண்டுவருகின்றனர் என்று எண்ணி மனம் மகிழ்ந்தாள். ஆனால், அவர்கள் அண்மியதும் தன் மகள் அல்லள் என்று உணர்ந்தும், தன் ஆற்றாமை மிகுதியால், ‘மணமக்களே! நீங்கள் வரும்வழியில் உம் எதிரே உம் போலும் காதலுடைய இருவர் ஆணும் பெண்ணுமாகப் போனதுண்டோ?’ என்று வினாவினாள். அதற்கு விடை கூறும் முகத்தால் ஆண்மகனான காளை, தன்னைத்தொடர்ந்துவரும் காதலியை நோக்கி, நான் ஆண்சிங்கம் போன்ற காளையைக் கண்டதுண்டு. அதனோடு வேறு ஒன்றையும் இந்த அம்மையார் கூறுகின்றாரே? நீ அதே சமயத்தில் வேறு யாரையேனும் கண்டதுண்டோ?’ என்று வினவுவதிலிருந்து அவ்வாண் மகன் ஆணையே பார்த்தனன் என்பதும், அவனுக்கு அயலே வந்த பெண்மகளைத் தான் ஏறிட்டும் பார்த்ததில்லை என்பதும் விளங்குவதால், அவனது கற்பொழுக்கம் நமக்கு எவ்வளவு கழிபேர் இன்பம் பயக்கவல்லதாக இருக்கிறது பாருங்கள்!

“பிறன்மனை நோக்காத பேர் ஆண்மை சான்றோர்க்கு

அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு,”

என்னும் திருக்குறள் செப்புவதும் இதைத்தானே! இந்தக் கருத்தைத் திருக்கோவையார் எத்துணையழகாக,

“மீண்டார் என உவந் தேன்கண் டும்மைஇம் மேதகவே
பூண்டார் இருவர்முன் போயின ரேபுலி யூர்எனைநின்
றாண்டான் அருவரை ஆளியன் னானைக்கண் டேன் அயலே
தாண்டா விளக்கனை யாய்என்னை யோ அன்னை

                                                        சொல்லியதே’.

என்று எடுத்துக்காட்டுகிறது?