பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5. கொடை மடம்பட்ட கோமான்

தண்டமிழ்மொழியில் கொடைமடம், படைமடம் என இருபெரும் தொடர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் படை மடமாவது எதிரில் நிற்க இயலாமல், புறமுதுகு காட்டிப் போர்க்களத்தினின்று இரிந்தோடும் வீரன் மீதோ, அன்றி ஆயுதமின்றி வெறுங் கையினனாய் நிற்கும் வீரன் மீதோ, வீரப்பண்பு இல்லாதார் மீதோ, புண்பட்டார் மீதோ, மூத்தார் மீதோ, இளையார் மீதோ, போர் செய்தற்குச் செல்லுதலாகும். இப்படிச் சென்று படைமடம்பட்ட பார்த்திபர்களோ, வீரப் பெருமக்களோ நம் செந்தமிழ் நாட்டில் இருந்திலர். ஆனால், கொடைமடம் பட்ட கொற்றவர் நம் நற்றமிழ் நாட்டில் இருந்துள்ளார். கொடை மடமாவது தமக்கு அமைந்த பிறவிக்குணமாகிய கொடைக் குணத்தால் அறியாமைப்படுதலாகும். தம்மை அணுகிக் கேட்டற்கு இயலாதவையான அஃறிணைப் பொருள் களிடத்தும் அன்பு காட்டி, இன்னது கொடுத்தால் இதற்குத் தகும் என்று கூடச் சிந்தியாமல். தம் உள்ளத்தின் போக்குக்கு இயைய ஈவதாகும். ஞானாமிரதம் என்னும் நூல், கொடைமடம் என்னும் தொடருக்குப் பொருள் காண்கையில், அகாரணத்தால் கொடை கொடுத்தல் என்று கூறுகிறது. திவாகரம் என்னும் நூல் வரையாது கொடுத்தலாகும் என்று விளக்குகிறது. எவ்வாறு பொருள் கொள்ளினும் கொடைமடம் என்பது, கொடுக்குங்கால் மடமைப்படுதலாம். அதாவது அறியாமையுறுதல் என்பதே நேரிய பொருளாகக் கொள்க. இங்ஙனம் அறியாமைப் பட்டவர்கள் பலராக இருப்பினும், இலக்கியங்களில் எடுத்துக் காட்டாக அமைந்தவர் இருவர்.