பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

அவர்களே பாரியும், பேகனும் ஆவர். இவ்வுண்மையை ஐயனாரிதனார் இயற்றிய புறப் பொருள் வெண்பா மாலையில் உள்ள,

“முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
எல்லைநீர் ஞாலத் திசைவிளங்கத்—தொல்லை
இராவாமல் ஈந்த இறைவர்போல் நீயும்

கரவாமல் ஈகை கடன்.

என்னும் வெண்பாவால் அறியலாம். இவர்களுள் இங்குப் பேகனது வரலாற்றை மட்டும் வரைந்து காட்டுவோமாக.

வையாவிக் கோப் பெரும்பேகன் சேரர் குடியின் தொடர்புடையவன். இவன் குடி முதல்வன் வேளாவிக் கோமான்; சேரன் செங்குட்டுவனது மாற்றாந் தாயின் தந்தையாவான். அதாவது சேரன் செங்குட்டுவனுக்குப் பாட்டன் முறையினன். இவன் பொதினி மலைக்குரிய ஆவியர் குலத்தில் தோன்றியவன். பொதினி மலை என்பது இப்பொழுது சீரும் சிறப்பும் பேரும் புகழும் பெற்று விளங்கும் பழனி மலையாகும். ஆவியர்குடி தோன்றல்களால் ஆட்சி புரியப்பட்டு வந்தமையால், இப் பழனித்திருப்பதி ஆவினன்குடி என்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆவியர் குடியில் தோன்றியவனே வையாவிக் கோப்பெரும் பேகன் ஆவான். ஆகவே, இவனும் மலைநாட்டு மன்னனாவன். மலைநாட்டு மன்னனேயானாலும் இவன் வாழ்ந்த ஊர் நல்லூர் என்று நவிலப்பெறும்.

இவன் யாதோர் அடைமொழியுமின்றி வெறும் பேகன் என்றும் கூறப்படும் பெருமை பெற்றவன்.

பேகன், கொடை, கல்வி, அறிவு, ஆண்மை ஆகியவற்றில் தலைசிறந்தவன். இவனது கொடைத்திறனும் படைத்திறனும் ஆள்வினையுடைமையும் கண்டே கபிலர், வன்பரணர், அரிசில் கிழார், பரணர், பெருங்-