பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

குன்றூர்க்கிழார் முதலானவர்கள் பாடியுள்ளனர். இத்தகையோருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவள் கண்ணகி. இவள் வருவிருந்து உவப்ப ஊட்டும் நேசம்மிக்கு உடையவள் ; கொழுநன் நினைப்பு அறிந்து ஒழுகும் திண்கற்பும் வாய்ந்தவள். இங்குக்குறிப்பிட்ட கண்ணகி என்பாள், கோவலனுக்கு இல்லக்கிழத்தியாக வாய்ந்த ஏந்திழையல்லள். அவள் வேறு ; இவள் வேறு. இக்கண்ணகி பெண்மைக்குரிய இயல்புடையளாய் இல்லறத்தை இனிது நடத்தி வரலானாள்.

பேகன் வாழ் இடம் மலைப் பாங்கர். அம்மலைப் பக்கல் கண்கொள்ளாக் கவின் பெருங் காட்சி நிறைந்தது. இயற்கைக் குடிலாக இலங்கவல்லது. இவ்விடத்து இயற்கை எழிலை அடிக்கடி பேகன் கண்டு இன்புறுவதுண்டு. ஒரு நாள் பேகன் தன் நாட்டு வளங்காணப் பணியாட்களுடன் வெளியே சென்றான். ஒவ்வோர் இடமாகக் கண்டு களித்துக் கொண்டேவந்தான். வான்முகில்கள் வரைகள் மீது தவழ்ந்து ஓடும் பொலிவைக் கண்டு பூரித்தான். அக்கொண்டல்கள் மலைகட்குக்கவிகை தாங்கி நிற்பனபோலும் எனக்கற்பனை செய்து களிப்புக் கொண்டான். கானமயில்கள் ஈட்டம் ஈட்டமாகவும், கூட்டம் கூட்டமாகவும் குலவி விளையாடுவதைக் கண்டான். அவற்றுள் ஒன்று தனித்துத் தன் தோகையினை விரித்துக் களிப்புடன் ஆடுவதையும் கண்ணுற்றான். அம் மஞ்சை மேகங் கண்டு மோகம் கொண்டு தோகை விரித்துக் ஆடுகின்றது என்பதை ஓராதவனாய், அது குளிர்க்கு வருந்தித் தன் தோகையை விரித்து ஆடுகின்றதோ என்று எண்ணி, அதன் நளிரினைத் தீர்க்க யாதுவழி என்று சிந்தனை கொண்டான். அவன் சிந்தனைக்கு யாதொன்றும் புலனாகவில்லை. தான் அணிந்திருந்த விலைமதித்தற்கரிய பொன் ஆடையை