7. மணிமேகலை பாடிய மாபெரும் புலவர்
மணிமேகலை எனனும் மாபெரும் நூலைப் பாடிய புலவர் யார் எனில், அவரே மதுரைக் கூலவாணிகச் சீத்தலைச் சாத்தனராம் சங்ககாலச் சான்றோருள் பெருமதிப்புப் பெற்ற பெருந்தகையராவார். இவர் பெரும் புலவராயும், பெரும் வணிகராயும் திகழ்ந்தவர். இவரது இயற்பெயர் சாத்தனார் என்பது. ஆனால், இவருடைய பெயர்க்கு முன் உள்ள அடை மொழிகளால் பல அரிய குறிப்புக்கள் நமக்கு அறிய வருகின்றன. இப்புலவர் வணிகர் தொழிலே மேற்கொண்டு இருந்தவர் என்பதை இவர் பெயர்க்கு முன் வாணிகச் சீத்தலைச் சாத்தனர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதனால் நன்கு உணரலாம், வாணிபம் பல துறையில் செய்யப்படும். அது பொன் வாணிபமாக வேனும், அறுவை (ஆடை) வாணிபமாகவேனும் மற்றும், வெவ்வேறான வாணிபமாகவேனும் இருக்கலாம். ஆனால், இப்புலவர் சிகாமணியார் தான்ய வியாபாரியாக இருந்தார் என்பதை இவர் கூலவாணிகச் சீத்தலைச் சாத்தனர் என்ற பெயர் பூண்டு இருப்பதால் உணரலாம். கூலம் என்பது நெல் முதலிய தான்யம் ஆகும்.
அடுத்தபடியாக இவர் பெயருடன் இணைத்துப் பேசப்பட்டுள்ள மதுரை என்னும் சொல்லைக் குறித்தும் சீத்தலை என்னும் மொழியைக் குறித்தும் சிறிது ஆராய்ச்சி செய்ய வேண்டியவராய் இருக்கின்றோம். இவர் தாம் மேற்கொண்ட தான்ய வியாபாரத்தினை மதுரையில் நடத்தி வந்தமையின் மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று குறிக்கப்பட்டு வந்தனர். சீத்தலைச் சாத்தனார் என்று ஏன்