பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

கட்டுரையின் நோக்கமாகும். இப்பகுதி திருக்குறளில் உள்ள கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.

வள்ளுவனார் கடவுள் பண்புகளை எம்முறையில் பகுத்துத் தம் நூலில் சுட்டியுள்ளார் என்பதை உற்று நோக்கும்போது, முதலாவதாகக் கடவுள் உண்டு என்பதை உதாரண வாயிலாக உணர்த்தினர் என்பது தெரிகிறது. அவர் அக்கடவுளேத் தொழுதலாலும் அணுகுதலாலும் ஏற்படக்கூடிய பயனை மொழிந்து, எத்துணை அறிவு பெற்றிருந்தாலும், கடவுள் திருவடிகளில் பற்று இல்லையானால், பயன் எதுவும் இல்லை என்பதையும் திறம்படப் பேசியுள்ளார்.

வள்ளுவர் கடவுள் பண்பினை வகுத்துப் பேசிய முறைப்பாட்டினைக் குறித்து விரிந்த அளவில் அறிந்து அன்புறுதற்கு முன்பு, அவர் கடவுளே எவ்வெச் சொற்களால் சுட்டியுள்ளார் என்பதை முதற்கண் நாம் அறிதல் சாலப் பொருத்தமேயாகும்.

திருவள்ளுவராம் பொய்யில் புலவர், இறைவனை “ஆதிபகவன்” என்றும், “வாலறிவன்” என்றும், “மலர்மிசை ஏகினான்” என்றும், “வேண்டுதல் வேண்டாமை இலான்” என்றும், “இறைவன்” என்றும், “பொறிவாயில் ஐந்தவித்தான்” என்றும், “தனக்குவமை இல்லாதான்” என்றும் “அறவாழி அந்தணன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு செந்நாப் போதாராம் திருவள்ளுவர் கடவுளுக்குரியனவாக எடுத்துக்கூறிய மொழியும், தொடர்களும் பொருள் பொலிவுடையனவாகவும் செறிவுடையனவாகவும் கடவுளின் இயல்புகள் இன்ன என்பனவற்றை விளக்குவனவாகவும் உள்ளன.