பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70



இருந்திருப்பான் என்பதை விதந்து கூற வேண்டா அன்றே ! உண்மையில் இவன் வீரம் செறிந்த விடலையாகவே இருந்தனன்.

இவன் பகைவர்கட்கு ஞாயிறுபோன்று வெப்பம் தருபவனாக இருந்தான் என்று தண்டமிழ்ச் சாத்தனார் தயக்கம் இன்றிக்கூறும் கூற்றே போதிய சான்றாகும். இதன் கருத்துச் சூரியன் எப்படித் தனது சுடும் இயல்பாகிய வெம்மையில்லை பொருள்களைச் சுட்டு அழிக்கின்றானே, அதுபோல இப்பாண்டியன் பகைவர்களைத் தன்சினமாகிய வெம்மையினால் சுட்டழிப்பவன் என்பதாம். இவ்வாறான வீரமும் சினமும் இவன் கொண்டிருந்ததனால், இவன் ஈரம் நெஞ்சம் இல்லாதவனாய் இருந்திருப்பானே என்று எண்ணவேண்டா. வீரமுள்ள இடத்தில் நிச்சயமாக ஈரம் இருந்தே தீரும். ஈரமாவது அன்பு: இந்த அன்பு இப்பாண்டியனிடம் குடி கொண்டிருந்தது. இதனைக் குறிப்பிடாமலும் விட்டிலர் புலவர் சீத்தலைச் சாத்தனார். இச்செழியன் பால் அமைந்த அன்பு தம்மிடத்தில் மட்டும் காட்டப் பட்ட அன்புபோலும் என்று நாம் உணர்தல் கூடாது. இத்தென்னவன் கொண்ட அன்பு சீத்தலைச் சாத்தனார் போன்ற புலவர்கள் யாவரிடத்தும் காட்டி வந்த அன்பாகும். இப்பாண்டியன் காட்டிய அன்பு தண்ணிய அன்பு : இன்பம் தரும் அன்பு. இக் கருத்து இப் புலவர் கூறும் உவமை வாயிலாக உணரக் கிடைப்பது. குளிர்மைக்கும் இனிமைக்கும் ஏற்றதான சந்திரனையே இப்பாண்டி மன்னன் அன்புப் பண்புக்கு அமைந்த உவமையாக அறிஞர் சீத்தலைச் சாத்தனார் அறைந்துள்ளார். இவ்வாறு பகைவர்க்கு ஞாயிறு அனையனாகவும், புலவர்கட்குத் திங்கள் போன்றவனாகவும் இருந்தான் என்பதைப் இப்புலவர் புலப்படுத்தும் புறநானூற்று அடிகள்,