பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. கம்பன் கவியும் காகுத்தன் கணையும்

கம்பன் கவியும் காகுத்தன் கணையும் என்னும் தலைப்பு நான்கு சொற்களைத் தன்னகத்தே கொண்டு திகழ்வதைக் காண்கின்றோம். ஒவ்வொரு சொல்லும் விளக்கம் பெறுதற்குரிய சொல்லேயாகும். கம்பர் தமிழ் நாட்டில் தலைசிறந்து விளங்கிய இடைப் பட்டகாலத்துப் பெரும் புலவர்களில் ஒருவர் என்பதை எவரும் அறிவர். தமிழுக்குக் கதியாவார் கச்சியப்பரும் திருவள்ளுவரும் என்று ஒரு சிலர் கருதிலுைம், திருமணம் செல்வகேசவராய முதலியாரைப் போன்றவர்கள் கம்பரும் திருவள்ளுவரும் என்று கூறிவந்த கூற்றுக்கு ஏற்றவர் கம்பர் என்று கூறுவதும் மிகவும் பொருத்தமேயாகும். “கல்வியில் பெரியன் கம்பன்” என்று பல்லாண்டுகளாகக் கூறப்பட்டு வரும் பழமொழியும் அவரது கல்விப் பெருக்கத்திற்குப் பெருஞ்சான்றாக நிற்கிறது.

அடுத்தாற்போல் உள்ள கவி என்னும் சொற் பொருளையும் நாம் ஊன்றிப் பார்த்தல் வேண்டும். கவி என்பது பாடல், செய்யுள், யாப்பு, தூக்கு என்றபொருள் தரும் மொழியே யாகும். கவி எவ்வாறு இருத்தல் வேண்டும்? பாடப்படுதல் வேண்டும்? என்பனவற்றைப் பவணந்தியார் கூற்றாய,

“பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போல்பல
சொல்லால் பொருட்கிடன் ஆக உணர்வினின்

வல்வோர் அணிபெறச் செய்வன செய்யுள்”

என்னும் நூற்பாவினால் நன்குணரலாம். மேலே கூறப்பட்ட செய்யுள் அமைப்பு முழுமையும் கம்பர் கவியுள் உண்டு என்பதில் எள்ளளவும் ஐயமின்று.