பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. சிலம்பையாத்த சீர்சால்புலவர்

சிலம்பையாத்த சீர்சால்புலவர் யாவரோ என ஐயுறவேண்டா. அவரே தண்டமிழ் மொழியில் தலைசிறந்து விளங்கும் ஐம்பெருங் காவியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் என்னும் சீரிய நூலை யாத்த இளங்கோ அடிகளார் ஆவார். அன்னாருடைய வாழ்க்கை வரலாற்றைச் சிறிது ஈண்டுச் சிந்திப்போமாக.

திருவள்ளுவர் தம் பொருட்பாலில் குடிமை என்னும் இயலில்

"வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி

பண்பிற் தலைப்பிரிதல் இன்று."

என்னும் குறளைப் பாடியுள்ளார். அன்னதற்கு உரை கூறிய பரிமேலழகர், தம் விளக்கவுரையில், "பழமையாவது தொன்று தொட்டு வருதல்; அது சேர சோழபாண்டியர் என்பது போல ஆதிகாலந் தொடங்கி மேம் பட்டுவருதல் என்பதாம்" என்று கூறியுள்ளார். இதனால் தமிழ்நாட்டுப் பழங்குடி மூவேந்தர்தம் குடி என்பது புலனாகிறது அன்றோ ? இப் பழங்குடிகளுள் ஒன்றாகிய சேரர் குடி, சிறப்புடைய குடிஎன்பது சேர, சோழ, பாண்டியர் என்னும் வைப்பு முறையில், முதன்மைக்கண் வைத்துப் பேசப்பட்டு வருதலாலும், சேரர்கட்கு வானவர் என்னும் சொல் இலக்கியங்களில் பெய்யப்பட்டிருத்தலாலும், ஒல்காப் பெருமைத் தொல்காப்பியனாரும் மூவேந்தரது மலர்களைக் குறிக்கையில், "போந்தை, வேம்பே ஆரெனவரூஉம் மாபெருந் தானையர்" என முதற்கண் சேரர் மாலையை