பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

“ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னங் குமரியொ டாயிடை

மன்மீக் கூறுகர் மறந்தபக் கடந்தே”

எனப் பதிற்றுப்பத்து நூல் கூறுவதிலிருந்து உணர்ந்துகொள்ளலாம்.

நெடுஞ்சேரலாதனுக்கு இரு இல்லக் கிழத்தியர் வாய்த்தனர். ஒருத்தி சோழன் மணக்கிள்ளியின் மகளாகிய நற்சோணை என்பவள். மற்றொருத்தி வேளாவிக் கோமானான பதுமன் என்பான் மகள். இவள் பெயர் இன்னது என்பதை அறிதற்கில்லை. நற்சோணை ஈன்ற மக்களே செங்குட்டுவனும், இளங்கோ அடிகளும் ஆவார். பதுமன் மகள் பெற்ற மைந்தர்கள் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் ஆவார். இவ்விரு மைந்தருள் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரன் அரச மரபிற்கேற்ற அருஞ்சிறப்புடன் வளர்க்கப்பட்டு, அரியாசனம் ஏறும் நன்னாள் வந்துற்றபோது, இவன் தலையில் சூட்டுதற்குரிய கண்ணியும் முடியும் பகைவேந்தரால் களவாடப்பட்டமையின், முடிசூட்டற்கென அமைத்த நல்ஓரை தவறாதிருக்க, உடனே அவ்விரண்டிற்கும் ஈடாகக் களங்காயால் ஆகிய கண்ணியும், நாரால் சமைத்த முடியும் இவனுக்குச் சூட்டப்பட்டு அரியாசனத்தில் அமர்த்தப்பட்டான். இக்காரணத்தால் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் என இவன் அழைக்கப்படுவானானான். இவனது தம்பியான ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் நன்முறையில் வளர்க்கப்பட்டு, நல்லரசு நடாத்தும் நன்னிலை பெற்ற காலத்துச் செய்த வீரச்செயல்கள் பலவாகும். அவற்றுள் ஒன்று நண்ணார் ஆடுகளைக் கவர்ந்ததாகும். இவன் அவர்களை வென்று அன்னார் கொண்டு சென்ற தகரினங்களைத் தந்து தன்