பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

தொண்டிமாநகரில் சேர்ப்பித்த காரணத்தால் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் எனப்பட்டான்.

இளங்கோ அடிகளாரின் திருத்தாதை நெடுஞ்சேரலாதன் என்பதும், அடிகளாரின் தமையன் செங்குட்டுவன் என்பதும் முன்னர் அறிவிக்கப்பட்டன. நெடுஞ்சேரலாதன் சிறந்த போர் வீரன். இவன் அஞ்சாநெஞ்சம் படைத்த ஆண்மையாளன் என்பது வேல் பல் தடக்கைப் பெருவிறல் கிள்ளியுடன் போரிட்டமையில் இருந்து உணரலாம். மேலும், இவன் சிறந்த சிவ பக்தன் என்பதும் தெரிகிறது. அவ்விறைவனார் திருவருள் பெற்றே தன் முதல் திருமகனான செங்குட்டுவனைப் பெற்றெடுத்தவன் என்பதை “செஞ்சடை வானவன் அருளினில் விளங்கவஞ்சித் தோன்றிய வானவ” எனச் சிலப்பதிகாரத்துக் கால்கோட் காதையடிகளால் காணலாம். இதனைமேலும் அறுதியிட்டு உறுதியாகக் கூறவேண்டுமானால், “ஆனே றூர்க் தோன் அருளில் தோன்றி, மாநிலம் விளக்கிய மன்னவன்” என அதே நூலில் வரும் வருந்தரு காதையின் அடிகளால் அறிந்துகொள்ளலாம். இச்செங்குட்டுவனுக்குப் பின்னர் பிறந்த திருமகனாரே இளங்கோ அடிகள் ஆவார். இவர் இயற்பெயர் இன்ன தென அறியக்கூடவில்லை. இவரைச் ‘சோ முனி’ என அடியார்க்கு நல்லார் அழைப்பர். இவர் அரச மரபிற்கேற்ப இளவரசுப் பட்டம் எய்துதற்குரியர் என்னும் காரணம் பற்றியும், செங்குட்டுவன் தம்பி எனும் முறைமை பற்றியும் இளங்கோ என அழைக்கப்பட்டிருக்கலாம் என்பது யூகித்தற்குரியது. ஆனால், இவர் அரசும் பெற்றிலர்; இளவரசு பட்டமும் அடைந்திலர். ஆனால் துறவுகொண்ட தூயராய் துலங்கினார்.

இளங்கோ துறவு பூண்டமைக்குக் காரணமும் உளது. அதாவது, நெடுஞ்சேரலாதன் தம் அத்தாணி