பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உணர்ந்துகொண்டனன். வந்த நிமித்திகனது வாட்கண் பார்வை இளங்கோவையே கூர்ந்து கவனிக்கத் தூண்டியது. அதனால், மீண்டும் ஒருமுறைக் கிருமுறை இளங்கோவை ஏற இறங்கப் பார்த் தனன். பார்த்து முடிந்தபிறகு, உள்ளதை உள்ள வாறு உரைக்கும் உரம் படைத்திருந்த காரணத் தால், சேர மன்னனை நோக்கி, “மன்னர் பெரும்! நும் மருங்கு வீற்றிருக்கும் இருவரும் உம் அருமைத் திருமக்கள் என்பதை அறிகின்றேன். அரசமரபின் முறைமைக்கு ஏற்ப, உமக்குப் பின்னர் அரசுக்கட்டில் ஏறுதற்குரியன் மூத்த மகன் என்பது முறைமையேயானாலும், அப்பதவி ஏற்றற்குரிய இயல்புகள் அனைத்தும். நும் இளைய மகனுக்கே இயைந் துள்ளன, மூத்த மகன் பால் அரசு பெறுதற்குரிய தோற்றப் பொலிவு காண்டற்கில்லை. இஃது என் கலையில் கண்ட உண்மைக் கருத்தேயாகும்” என்று நுவன்றனன்.

இங்ஙனம் நிமித்திகன் கூறக் கேட்டபோது, செங்குட்டுவன் உள்ளத்தில் வருத்தம் மிக்கது. அவ்வருத்தம் புறத்தும் தோற்றம் அளிப்பதுபோல் முகத்தில் தோன்றிய ஏக்கம் காட்டியது. நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்' என்பது பொய்யாமொழியன்றோ! என்றாலும், செங்குட்டுவன் அதனை நன்கு வெளிப்படுத்தா வண்ணம் வீற்றிருந்தான். இளங்கோ மட்டும் இதனை உணர்ந்துகொண்டனர். முன்னத்தின் உணரும் மூதறிவுடையார் அல்லரோ அவர்! பின்னர் நெடுஞ்சேரலாதன் நிமித்திகனுக்குச் சன்மானம் ஈய அவனும் வெளியேறினன். அவன் சென்ற பின்றை இளங்கோ அடிகள் நன்கு சிந்தித்து “முன்னவன் இருக்கப் பின்னவன் அரசு பெறுதல், முறைமை அன்று” என்பதை உணர்ந்தனர். “தாம் அரண்மனையில் இருப்பின் தம் அண்ணனான செங்குட்டுவன் உள்ளம் தம்மைக் காணுந்தோறும்