பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

தவர் என்பது பலர் கொள்கை. அக்கடைச்சங்க காலத்தின் இறுதிக்காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பதும் பலர் கொள்கை. ஆனால், கடைச்சங்கத்தின் காலம் கி. பி. ஐந்தாம்நூறாண்டே எனக் கூறுவோராகவும் ஒரு சிலர் உளர். ஆகவே, இளங்கோ அடிகள் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு புலவரா? அன்றி கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு புலவரா? என்பதை இப்பொழுது நிலைநிறுத்த வேண்டும். “கடைச்சங்கம் இரண்டாம் நூற்றாண்டாக இருப்பினும் சரி, அன்றிக் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டாக அமையினும் சரி. இளங்கோ அடிகள் கடைச்சங்க காலப் புலவர் வரிசையில் அமைத்தற்குரியர் அல்லர்; அப்படி அமைத்தற்குரியராயின், சங்க காலத்துத் தொகை நூல்களுள் ஒன்றிலேனும் இவர் பாடிய பாடலாக ஏதேனும் ஒன்று காணப் படவேண்டும்” என்று வாது புரிபவரும் சிலர் உளர். இக்கருத்து வேறுபாடுகள் ஒருபுறம் இருந்தாலும், இவர் கடைச்சங்க காலமாகிய கி. பி. இரண்டாம் நூற்றாண்டு என்பதற்குரிய சான்றுகள் பொருத்தமானவையாகக் காணப்படுகின்றன.

இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் காணப்படும் கானல் வரி என்னும் பகுதியில் உள்ள பாடல்கள் சிலவற்றைத் திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுள் இயற்றித் தந்த இறையனார் அகப்பொருட்கு உரை வகுத்த மதுரைக் கணக் காயனார் மகனார் நக்கீரனார் உரை கூறுகையில், மேற்கோளாகக் காட்டிச் சென்றுள்ளார். இவ்வெடுத்துக்காட்டே யன்றி நம்புலவர் பெருமானாரின் தமைபனான சேரன் செங்குட்டுவன் கற்புக்கடம் பூண்ட கண்ணகி தேவிக்குக் கோயில் அமைத்து விழாக் கொண்டாடினான் என்றும், அவ்விழாவைக்கொண்டாடியபோது இலங்கை வேந்தனாம் கயவாகு என்பானும்