பக்கம்:கட்டுரை வளம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

கட்டுரை வளம்


இலக்கியப் பிரிவுகளுள் தொன்மைமிகுந்தது கவிதையே உரைநடையும் இலக்கியத்தின் ஒரு கூறேயாகும் ஆயினும், இது வளர்ந்தது பிற்காலத்திலேதான் எனலாம். சிறப்பாக வாழ்வு பெற்றது, ஐரோப்பியப் பாதிரிமார்களின் தமிழ்த் தொண்டிற்குப் பின்னரே என்றும் கூறல் வேண்டும்.


தமிழின் தொன்னுாலும் முன்னுாலுமான ‘ஒல்காப்பெரும்புகழ்த் தொல்காப்பியம்' தந்த'தொல்காப்பியனாரும்' இலக்கித்தை ஏழு பிரிவுகளாகக் கூறியுள்ளார் :

பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே

அங்கதம் முதுசொல்லொ டவ்வேழ் நிலத்தும்

வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின்

நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும்

யாப்பின் வழியது என்மனார் புலவர்.

-தொல். செய்யுளியல்,75

இந் நூற்பாவிலிருந்து பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் (பழமொழி) என்ற ஏழு பிரிவுகளும் தொல்காப்பியனார் காலத்து வழங்கிய இலக்கிய வகைகளாகும் எனலாம். இங்குக் குறிக்கப் பெற்றவற்றுள் நூல் என்பது இலக்கணம் முதலிய அறிவுத்துறைக்கு அவ்வளவாகப் பயன்படாதது என்பதை மட்டும் கருத்தில் கொள்ளுதல் நலம்.

தமிழ் இலக்கியத்தில் பொருள் பற்றிய பாகுபாடாகத் தொன்று தொட்டு வழங்கி வருவது அகம், புறம், என்ற இருவகைப் பகுப்புகளாகும். அகத்திலுங்கூடக் குறிஞ்சி. முல்லை, மருதம், நெய்தல்’ பாலை என்ற ஐந்தினைப் பகுப்புகளைக் காண்கிறோம். புறமும் அவ்வாறே பல பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ‘அகம், புறம்’ என்ற வரையறைகள் எல்லாம், இப்பொழுது இலக்கியத் துறையிலே வகைப்படுத்தப்படுவதில்லை எனலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/10&oldid=1253001" இலிருந்து மீள்விக்கப்பட்டது