பக்கம்:கட்டுரை வளம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. இராமாயணப் போர்க்களங்கள்

மலர்தலையுலகில் எத்தனையோ உயிரினங்கள் தோன்றித் தோன்றி வளர்ந்து இருந்து மறைந்துவிட்டன. வரலாற்றுத் தொடக்கக் கால மனிதன் வாழ்விற்கும் இன்றைய நாகரிக உலகின் மனித வாழ்விற்கும் இடையில் எத்தனையோ வேற்றுமைகள் காணக் கிடக்கின்றன. ஆயினும், மனிதனின் அடிப்படை உணர்வுகள் மாற வில்லை; மாறவும் மாட்டா மனிதன் புறவாழ்வு எத்தனையோ மாற்றங்களைக் காண்கின்றது. ஆயினும், அகவாழ்வில் பொங்கியெழும் உணர்ச்சிகள் முழுமை பெற்று நிற்கக் காணலாம். மனித மனத்தைப் பாதிக்கும் இன்ப துன்ப உணர்வுகள்; பசி, தாகம், வேட்கை போன்ற மனித வாழ்வின் அடிப்படை உணர்வுகள், இன்றுவரை எத்தகைய மாற்றமும் இல்லாமலேயே இயங்கி வருதல் கண்கூடு மனித இன வரலாற்றில் படிப்படியான வளர்ச்சி யுண்டு; எனவே சூழல்கள் மாற மாற, வாழ்விலும் பல மாற்றங்கள் தோன்றுதல் இயற்கை. ஆயினும், அக வாழ்வின் பற்றுக்கோடாய் இயங்கும் காதல், புறவாழ்வின் சீர்மையாய் விளங்கும் போர் போன்ற உணர்ச்சிகளை நோக்க, மனிதன் மனத்தில் ஆழ வேரூன்றி நிலைத்து, வாழையடி வாழையாக இலங்கி வருவதனைக் காணலாம்.

இது குறித்தே பழந்தமிழர், தம் வாழ்வினை அகம் புறம் என இரு கூறாகப் பகுத்தனர். காதல் நெஞ்சங்கள் வாழும் அகவாழ்வு, வீட்டு வாழ்வாகவும், காதலற்ற பகைமை நெஞ்சங்கள் இரண்டு பிணங்கி வேறுபட்டுப் போரிட்டு, உடற்றுவது நாட்டு அரசியலின் இன்றிய மையாத கூறாகிய போர் வாழ்வாகவும் அமைந்துவிட்டன. வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் இருவேறு இயற்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/105&oldid=1377423" இலிருந்து மீள்விக்கப்பட்டது