பக்கம்:கட்டுரை வளம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தின் பண்பும் பாகுபாடும்

9


ஆங்கில நூலார் இம்முறையில் தமது இலக்கியத்தைப் பாகுபாடு செய்வதில்லை. கவிஞன் தன் உள்ளத்து உணர்ச்சியை வெளியிட்டுத் தான் கலந்து பாடுவது தன்னுணர்ச்சிப் பாட்டு (Lyric) என்றும், தன்னிகரில்லாத தலைமக்கள் வாழ்வினை வரலாறாகக் காப்பியப் போக்கில் சுவைபட வடித்துக் காட்டுவது காவியம் (Epic) என்றும், நீதியை நிலைக்களமாகக் கொண்டு நீதியை உணர்த்த எழுந்த இலக்கியங்கள் நீதிநூல் (Didactive poetry) என்றும் கூறப்படும். ‘அங்கதம்’ என்று தமிழில் வழங்கப்படும் இலக்கியப் பிரிவு அங்கே எள்ளல் குறிப்புப் பொருந்திவரும் பாட்டு (Satiric poetry) என்றும், முல்லை நிலம் பற்றிய பாட்டு (Pastoral poetry) என்றும், இறைவனைக் “காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கிப் பாடும் பாடல்கள் பக்திப் பாடல்கள் (Hymns) என்றும், மெய்யுணர்வு கொளுத்தும் பாடல்கள் (Reflective poetry) என்றும் வழங்கப்படும். இவையே மேலை நாட்டில் இலக்கியத்தின் வகைகளாகக் கொள்ளப்படுகின்றன .

மேலும், தனி ஒருவர் வாழ்வில் நிகழ்ந்த அனுபவம் பற்றியும், மனித சமுதாயத்தின் பொதுவான அனுபவம் பற்றியும், தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையே உள்ள உறவைக் கிளத்திக் கூறும் அனுபவம் பற்றியும், இயற்கையின் இனிமையோடும் இணைந்தும் இயற்கையின் சீற்றத்தோடு சினந்தும் எழும் உறவின் அனுபவம் பற்றியும் உலகியலில் காண இயலாத புதிய செய்திகளைக் கற்பனைக் தேரில் ஏறிக் கண்டாற் போன்ற அனுபவம் பற்றியும் இலக்கியங்கள் எழலாம் என்றும் அறிஞர் கூறியுள்ளனர்.

புலவர் தம் மன நிலையையொட்டியும் இலக்கியம் பாகுபாகு செய்யப்படும் என்பதை நாம் முன்னரே கணடோம். புலவர்கள் உணர்ச்சியில் திளைத்து உணர்வே வடிவாய்த் தாம் கலந்து பாடியவை ஒன்றிய பாட்டு (Personal or Subjective poetry) என்றும் மற்றவருடைய அனுபவத்தைத் தாம் கலவாமல் உள்ளதை உள்ளவாறே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/11&oldid=1253004" இலிருந்து மீள்விக்கப்பட்டது