பக்கம்:கட்டுரை வளம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

கட்டுரை வளம்

 எவ்வகைப் பற்றும் இன்றி உணர்த்தும் வகையில் பாடியவை ஒன்றாயயப் பாட்டு (Impersonal or objective Poetry) என்றும் கூறுவர். முன்னையதில் தன்னுணர்ச்சிப் பாடல்களும் பக்திப் பாடல்களும் அடங்கும். பின்னையதில் எடுத்துரைப் பாட்டுகளும் (Narrative poetry) காவியங்களும் சேரும். நாடகம் மட்டும், இரண்டும் கலந்து வருவதாகும் (Both Subjective and objective) மேலும், இலக்கியத்தினை நேர் இலக்கியம் (Pure Lite.ature) என்றும், வகைப்படுத்துவர். கலையின்பம் மட்டுமே நோக்கமாகக் கொண்டு புலவர் படைப்பன 'நேர் இலக்கியமாகும்'. அரசியல்,சமயப்பற்று, பரிசு பெறும் வேட்கை இவற்றால் புலவர் பாடுவன, ‘சார்பு இலக்கியம்’ என்க் கொள்ளப்படும்.

சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகளுக்குக் கலையின்பம் மட்டுமே நோக்கமாகும். ஆனால், மணிமேகலையை இயற்றிய சாத்தனாருக்குக் கலையின்பத்தோடு பெளத்த சமயக் கருத்துகளையும் உணர்த்த வேண்டும் என்ற எண்ணம் மிகுதியாய் இருந்தது. எனவே, முன்னையது நேர் இலக்கியமென்றும் பின்னையது 'சார்பு இலக்கியமென்றும்' கூறப்படும்.

எனவே, இலக்கியம் மனித வாழ்விலிருந்து முகிழ்த்து மனிதனை மகிழ்விப்பதும் உணர்விப்பதுமான தொழிலை ஆற்றுகின்றது எனலாம். இலக்கியத்தின் பணி இன்பத்தை மட்டும் தருவது அன்று; இன்பத்தோடு வாழ்வின் குறிக் கோளினையும் ஒரளவு இன்னதென்று உணர்த்த வேண்டும். ஏனெனில், இலக்கிய ஆசிரியன் படிப்பவன் உள்ளத்தில் என்ன சிந்தனையைக் கிளறுகின்றானோ, அதனைக் கொண்டே அவன் மதிப்பிடப்பெறுகின்றான்’ என்பது நன்கு புலனாகும்.


1. Poets are judged by the frame of mind they induce. —Mathew Arnold, Eassays in Criticism, p. 144.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/12&oldid=1253005" இலிருந்து மீள்விக்கப்பட்டது