பக்கம்:கட்டுரை வளம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

கட்டுரை வளம்

 தாகும் பிள்ளைத் தமிழ்ப் பருவங்களிலே முத்தம், வருகை, அம்புலி’ என்னும் பருவங்கள் மிகச்சிறந்த பருவங்கள் என்பர்.

ஆறாவது பருவம், வருகைப் பருவம்’ ஆகும். இது ‘வாரானைப் பருவம்’ என்றும் வழங்கப்படும். இது பதின் மூன்றாம் மாதத்து நிகழ்ச்சியைக் கூறுவது. தளர் நடையிட்டு வரும் குழந்தையை வா’ என்று அழைப்பது இப்பருவமாகும்.

ஏழாவது பருவம், ‘அப்புலிப் பருவம்’ ஆகும் இது பதினைந்தாம் மாதத்து நிகழ்வதைக் கூறுவதாகும். இது சந்திரனை நோக்கிக் குழந்தையுடன் ஆடவா” என்று அழைக்கும் பருவமாகும். சந்திரனைச் சாம, பேத, தான, தண்ட முறைகளில் அழைக்கும் முறை மிகவும் அழகுடையதாகும். இப்பருவம் பாடற்கு அரிய பருவம் என்பதனைப் ‘பிள்ளைக் கவிக் கம்புலியாம்’ என்ற பாடலின் தொடர் விளக்குகிறது. பாட்டுடைத் தலைவர்க்கும் சந்திரனுக்கும் ஒப்புமை கூறுதலும் வேற்றுமை கூறுதலும், வந்தால் விளையும் நன்மை கூறுதலும் வராவிட்டால் நிகழும் தீமை கூறுதலும் புலவர்களின் கற்பனைக்கு விருந்தளிக்க வல்லனவாகும். இப்பருவப் பாடல்களில் புலவர்களது புலமை நலத்தினை நன்கு காணலாம்.

இதுவரையில் கூறப்பட்ட ஏழு பருவங்களும் ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் ஆகிய இரு பிள்ளைத் தமிழ்களுக்கும் பொதுவானவை.

ஆண்பாற் பிள்ளைத் தமிழின் எட்டாவது பருவம், ‘சிற்றில் இழைத்தல்’ என்பதாகும். இது பதினேழாவது மாதத்தில் பாடப்படுவதாகும். இது சிறுமியர் மணல்வீடு கட்டி விளையாடுகையில், ஆண்குழந்தை அதைக் காலால் உதைத்து அழிக்கின்றபோது, எமது சிற்றிலை அழிக்க வேண்டா என்று பாடப்படுவதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/128&oldid=1382655" இலிருந்து மீள்விக்கப்பட்டது