பக்கம்:கட்டுரை வளம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2. தொல்காப்பியனார் தந்த பொருளதிகாரம்

தொன்று பிறந்து மூத்த மொழி தமிழ். இம்மொழியில் எண்ணற்ற இலக்கிய நூல்களும் இலக்கண நூல்களும் எழுந்துள்ளன. அவற்றுள் காலத்தால் முற்பட்டதும் பெருமைக்குரியதுமாய் இருக்கும் நூல் தொல்காப்பியமாகும். இந்நூலுக்கு முன்னர்த் தோன்றினவாகச் சில நூல்கள் கூறப்படினும், அந்நூல்களைப் பற்றி நாம் ஒன்றும் இன்று திட்டவட்டமாக அறியக் கூடவில்லை. இடைக்காலத்து எழுந்த 'இறையனார் களவியல்’ என்னும் இலக்கண நூலின் உரைகாரர், தொல்காப்பியத்தோடு தோன்றியனவாகப் பல நூற் பெயர்களைத் தந்துள்ளார். ஆயினும், அவற்றுள் ஒன்றேனும் இது போழ்து கிட்டவில்லை. மேலும் இடைக்காலத்தில் தொல்காப்பியப் பொருளதிகாரம் மறைப்புண்டிருந்தது என்பது தெரிய வருகிறது. அக்காலத்துப் பாண்டிய மன்னன், 'பொருளதிகாரம் இல்லையே!' என்று கவன்றுரைத்தனன் என இறையனார் களவியல் உரைகாரர் குறிப்பிடுகிறார்.

இறையனார் களவியலுரை கொண்டு தொல்காப்பியம் இடைக்காலத்தில் மறைப்புண்டிருந்ததோ என வேண்டியுள்ளது. ஆயினும், இன்று தொல்காப்பியப் பொருளதிகாரம் முழுமையாய்க் கிட்டுவது தமிழர் செய்த தவப்பேறேயாகும்.

தொல்காப்பியனார் குறித்த வரலாறு பற்றிப் பல செய்திகள் வழங்குகின்றன. அவற்றுள் தொல்காப்பியனாருடன் ஒருசாலை மாணாக்கராகிய பனம்பாரனார் பாடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/13&oldid=1253016" இலிருந்து மீள்விக்கப்பட்டது