பக்கம்:கட்டுரை வளம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

கட்டுரை வளம்


தொல்காப்பியச் சிறப்புப் பாயிரமே சிறந்த சான்றாகக் கொள்ளத்தக்கது.

பனம்பாரனார் சிறப்புப் பாயிரம் கொண்டு வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பிலே வழங்கும் செந்தமிழ் மொழியின் உலக வழக்கையும் செய்யுள் வழக்கையும் அடிப்படையாகக்கொண்டு, தமக்கு முன்னுள்ள தமிழ் நூல்களையும் நோக்கி, எழுத்து, சொல், பொருள், என்னும் மூவகையிலக்கணங்களையும் முறைப்படஆராய்ந்து, அவற்றின் இயல்புகளையெல்லாம் தொல்காப்பியனார் தாம் இயற்றிய தொல்காப்பியத்தில் தொகுத்துத் தந்துள்ளார் என்பது தெரியவரும். மேலும், இப்பொழுது நமக்குக் கிட்டும் இலக்கண நூல்களுள் தொன்மையுடையதாயும் முதன்மையுடைய தாயும் ஒரு தலையாக எண்ணப்படுவது தொல்காப்பியமேயாகும். எனவே, இலக்கண ஆசிரியர்களுள் தொல்காப்பியனார் தலைமை இடம் பெறுகின்றார். பண்டை இலக்கியங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கும் தொல்காப்பியமே நமக்கு உறுதுணை செய்கின்றது பழந்தமிழர் வரலாற்றிற்கு நல்லரண் செய்வது இந்நூலேயாகும.

'கூறிய குன்றினும் முதல் நூல் கூட்டித்

தோமின் றுணர்தல் தொல்காப் பியன்தன்

ஆணையின் தமிழ் அறிங் தோர்க்குக் கடனே'


என்று, பல்காயனார், என்னும் பழம்புலவர் ஒருவர் பாராட்டுவது, தொல்காப்பியனார் வகுத்துரைத்த ஆணையின் வழியேதான், பின்வந்த தமிழ் இலக்கண ஆசிரியர்கள் நூல் இயற்றினர் என்பதனைத் தெற்றெனத் தெரிவிக்கின்றது. இதனாலும் தொல்காப்பியனாரின் தலைமைச் சிறப்புப் புலனாகின்றது. மேலும், பிற்காலப் புலவராகிய சுவாமிநாததேசிகர் தமது இலக்கணக்கொத்தில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/14&oldid=1253018" இலிருந்து மீள்விக்கப்பட்டது