பக்கம்:கட்டுரை வளம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

கட்டுரை வளம்


பெயர் 'தொல்' என்ற அடை மொழியுடனும் ‘ஆர்’ என்ற சிறப்புப்பெயர் விகுதியுடனும் வழங்கப்பெற்றிருக்க வேண்டும்' எனக் கருதுவர். மேலும், 'காப்பியன் என்னும் பெயருடைய புலவர் பலர் அக் காலத்தே வாழ்ந்திருந்ததால் அவரினும் வேறு பிரிந்து அறிதற்காக இத்தகு அடைமொழி சேர்த்து வழங்கப் பெற்றனர்’ என்பர். இவர் சேர நாட்டைச் சேர்ந்தவர் என்றும், இன்ன சமயத்தினைச் சேர்ந்தவர் என்றும் துணிந்து கூற முடியவில்லை என்றும், கி. மு. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந் திருத்தல் வேண்டும் என்றும் ஒருவாறு கூறலாம். மேலும், தொல்காப்பியனார் தம் ஆசிரியர் அகத்தியனார்’ என்பதும், ‘தொல்காப்பியத்திற்கு முதல் நூல் அகத்தியம்’ என்பதும் பலரால் இன்று நம்பப்படும் செய்தியாகும்.

இத்தகு சிறப்புப் பொருந்திய தொல்லாசிரியரும் நல்லாசிரியருமான தொல்காப்பியனார் இயற்றிய நூல் தொல்காப்பியம் என வழங்கப்படுகிறது. தொல்காப்பியம் என்னும் நூற்பெயர் தொல்காப்பியனாரால் செய்யப்பட்டது எனப் பொருள்படுவதாகக் கூறுவர். இளப்பூரணர், சேனாவரையர் முதலிய உரையாசிரியர்கள் இக்கொளகை உடையோர் ஆவர். ஆயினும், நாவலர் டாக்டர் ச. சோமசுந்தர பாரதியார் அவர்கள், 'இந்நூலாசிரியரின் பெயராகிய தொல்காப்பியர் என்பதே இந்நூலுக்கு வழங்கப்பெற்றுப் பிற்காலத்தில் தொல்காப்பியம் எனப் பிழையாக வழங்கப்பட்டது’ என்பர்.

தொல்காப்பியத்தில் ஏறத்தாழ இருநூற்றைம்பது இடங்களில் தொல்காப்பியனார், தம் முன்னுரல் ஆசிரியர் பலரை, “என்மனார் புறவர்,’ ‘யாப்பறி புலவர்','நுண்ணிதின் உணர்ந்தோர்', 'என்ப,’ ‘மொழித் தொன்னெறிப் புலவர்', 'கூறுப, அறிந்திசினோரே’ என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளமை கண்டு, தமிழில் தொல்காப்பியத்திற்கும் முன்னர் இலக்கண நூல்கள் இருந்திருத்தல் வேண்டும் எனத் துணியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/16&oldid=1253079" இலிருந்து மீள்விக்கப்பட்டது