பக்கம்:கட்டுரை வளம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. கானல் வரி

வாழ்க்கையைப் போலப் பரந்து விரிந்த கடல் ஒரு புறம், வாழ்க்கையோடு கலக்கும் கலையைப் போன்று கடலிற்கலக்கும் காவிரியாறு பிறிதொருபுறம் காவிரிப்பூம் பட்டினத்தில் இந்திர விழா முடிந்த பின்னர் சித்திரைச் சித்திரைத் திங்கள்சேர்ந்தென என்னும் சித்திரை முழுநிலா நாளன்று கடலாடக் கோவலனும் மாதவியும் சென்றனர், புலால் மணம் கடியும் கைதைவேலி நெய்தலங் கானலிலே, சித்திரப் படாத்தில் ஒரு விதானம் அமைத்து இன்பமாய் வீற்றிருந்தனர். எங்கும் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. அது போது மாநெடுங்கண் மாதவி, தோழி வயந்தமாலை கையிலிருத்த யாழை வாங்கி, அஃது எண் வகையில் குற்றம் தீர்ந்ததா என்று, பண் வகையால் ஆராய்ந்து கண்டாள். அவள் மரகத மணித்தாள் செறித்த மணிக்காந்தாள் மெல் விரல்கள் பயிர் வண்டின் கிளைபோலப் பன்னரம்பின் மிசைப் படர்ந்தன. பின்னர் ஏவலன் பின் உரிமையால் அவ்வியாழைக் கோவலன் கையிற் கொடுத்துப் பாணியா தென வினவி நின்றாள். கோவலன் அவ்வியாழைக் கையில் வாங்கி, அகப்பொருட் சுவை அமைந்தனவும், காவிரியை நோக்கினவும், கடற்கானல் வரிப்பாணியும் ஆகிய இசைப் பாடல்களை மாதவிதன் மனமகிழ வாசிக்கத் தொடங் கினான்.

ஆயின், மாதவிக்குக் கோவலன் மனம் மகிழ இசைத்த பாட்டு வெறுப்பை விளைத்தது. மாதவி, அவன் யாரோ ஒரு பெண்ணின் மேல் உயிர்க்காதல் கொண்டு உள்ளுருகிப் பாடுவதாக எண்ணி மயங்கினாள். எனவே, அவள் முறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/86&oldid=1376072" இலிருந்து மீள்விக்கப்பட்டது