பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சிறப்புரை

“யுனெஸ்கோ கூரியர்” தமிழ்ப் பதிப்பின் நிர்வாக ஆசிரியர் திரு மணவை முஸ்தபா அவர்கள், “கணினிக் கலைச் சொல் களஞ்சிய அகராதி” எனும் நூலை உருவாக்கியுள்ளமை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உலகை இன்று ஒரு குக்கிராம நிலைக்குச் சுருக்கிவிட்டதெனில், அது மிகையன்று. இதன் பயனாகக் கணினியின் செல்வாக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து வருகிறது; அடுத்த நூற்றாண்டின் விஞ்ஞான மேன்மைக்கு அடித்தளமாகவும் அமைந்துள்ளது கணினி. எனவே, கணினி அறிவாற்றலை வளர்த்துக் கொண்டு, தகவல் தொழில்நுட்பத்தில் வல்லமை பெற்று, உலகில் மற்ற நாடுகளைவிட மற்ற சமுதாயங்களைவிடத் தமிழ்ச் சமுதாயம் முன்னேற்றம் எய்திட வேண்டும் என்பதற்காகத் தகவல் தொழில்நுட்பத்தைத் தமிழகத்தில் வளர்ப்பதிலும், கணினிக் கல்வியைப் பரப்புவதிலும் தமிழக அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. 1999ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்களில் “உலகத் தமிழ் இணையக் கருத்தரங்க மாநாடு” சென்னையில் நடத்தப்பட்டு, அதன் தொடர் பணியாகத் "தரப்படுத்தப்பட்ட தமிழ் விசைப் பலகை” (Standardised Tamil Key-Board) “தமிழ் வரிவடிவக் குறியீடுகள்” (Tamil Glyph Codes) ஆகியவை உருவாக்கப்பட்டு வெளியிடப் பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் மென் பொருள்கள் தயாரிக்கப்படவும் ஊக்கமளிக்கப் பட்டுள்ளது. உலகின் பல பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் தமிழ் மொழியை இணையத்தின் வழியே பயில்வதற்குக் களமமைக்கும் முயற்சியாக "உலகத் தமிழ் இணையப் பல்கலைக் கழகம்” (Tamil Virtual University) தோற்றுவிக்கப்படவும் ஆவன செய்யப்படுகிறது. மேலும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினிக் கல்வி கற்பிக்கப்படவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

9