பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரு மணவை முஸ்தபா அவர்கள் 'அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்' என்ற அரிய நூலையும், அதன் தொடர்ச்சியாக 'மருத்துவ, அறிவியல், தொழில்நுட்பக் கலைச் சொல் களஞ்சிய அகராதி' என்னும் பயன்மிகு நூலையும், 'மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்' என்னும் பாராட்டுக்குரிய நூலையும் வழங்கிய பெருமைக்குரியவர். இன்று இக்காலத்தின் இன்றியமையாத தேவையாகும் இந்நூலை இயற்றித் தந்ததன் மூலம் அவரை 'அறிவியல் களஞ்சியச் செம்மல்' என்று பாராட்டுவது பொருத்தமாகும்.

அறிவியல் தமிழுக்கு ஆக்கம் செய்யும் தொண்டில் ஈடுபட்டுப் பலதுறை கலைச் சொல் களஞ்சியங்களைத் தொடர்ந்து இயற்றித் தந்து தமிழுலகுக்குப் பெருமை சேர்க்கும் அருமை நண்பர் முஸ்தபா அவர்களின் பணியைப் பாராட்டுவதுடன், கணினிக் கல்வித் துறையில் விளையும் விரைந்த வளர்ச்சியினால் உருவாகும் பற்பல புதிய ஆங்கிலச் சொற்களையும் அவ்வப்போது தமிழில் தெளிவிக்கும் முறையில், உரிய இணைப்புகளை ஆண்டுதோறும் வெளியிட வேண்டும் என்னும் என் விழைவையும் தெரிவித்துக் கொள்கிறேன். திரு மணவை முஸ்தபா அவர்களின். அறிவியல் தமிழ்த் தொண்டு, காலத்தை வெல்லும் ஆற்றலைத் தமிழுக்குத் தருவதுடன், காலத்தால் அழியாத செல்வமும் ஆகும். அவர் பணி சிறக்கவும் பல்லாண்டு நலமுடன் வாழவும் என் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை - 9

அன்பன்

29- 10 - 1999

க. அன்பழகன்


13