பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வாழ்த்துரை

திரு மணவை முஸ்தபா அவர்கள் சிறந்த சிந்தனையாளர். எத்தனையோ பேர் இலக்கியங்களைப் படித்தும், இலக்கியங்களைப் படைத்தும் தமிழ் வளர்ச்சிக்குத் துணை செய்கின்றனர். ஆனால், நம்முடைய மணவை முஸ்தபாவுக்கு அறிவியல் தமிழில் உள்ள ஆர்வமும் அக்கறையுமே அதிகம். எனவேதான் அறிவியல் வகையில் சிந்திப்பதைத் தன் வாழ்நாள் பயிற்சியாகக் கொண்டதோடு மட்டுமல்லாமல் அந்தச் சிந்தனைகளை நல்ல தமிழில் வடித்து, அதன் வாயிலாகத் தமிழ் மக்களின் அறிவியல் வேட்கைக்குத் தேவையான தீனியைத் தருவதில் முன்னின்று செயல்படுகிறார். அதிலும் கணினி தொடர்பான சொற்களைத் தொகுத்து, ஒர் அகராதி வெளியிடுவதும், அந்த அகராதியில் கூட, பிறமொழிச் சொல் கலவாத நிலையில் நல்ல தமிழ்ச் சொற்களையே அமைத்திருப்பதும் அவருடைய மொழி ஆர்வத்திற்கும் திறமைக்கும் சான்றாகும். அந்த வகையில் அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 'Bus'-ஐ, 'பஸ்' என்று அப்படியே சொல்லலாமென்று சொல்லுகின்ற வீம்புக் கூட்டத்தினிடையில் இவர் ஒரு வேறுபட்ட மனிதராகவே விளங்குகிறார். அப்படிச் சொல்லச் சொல்லுகின்றவர்கள் எதைச் சொல்லச் சொல்கிறார்கள் என்ற தெளிவு அவர்களிடத்திலேயே இல்லை. 'Bus' என்பதும் 'பஸ்' தான். 'சீழ்நீர்' என்பதைக் குறிக்கும் 'Pus' என்பதும் 'பஸ்' தான். இதைப்பற்றியெல்லாம் இவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.

தமிழைக் கேலி செய்துவிட்டால், தாங்கள் இந்த நாட்டில் தலையாய பணி செய்துவிட்டதாகக் கருதும் போக்கினர் பலருக்கிடையில் மிக நுட்பமான அறிவியல் சொற்களைக்கூட அழகிய தமிழில் வடித்துத் தந்துள்ள திரு. மணவை முஸ்தபா பாராட்டுக்குரியவர். இப்பணி மேலும் தொடரட்டும்; அறிவியல் தமிழுக்கு ஆக்கம் கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.

சென்னை - 9

அன்புடன்

25- 10 - 1999

மு. தமிழ்க்குடிமகன்


14