பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கருத்துரை

“உலக உயிர்களில் கருவிகளை உருவாக்கும் ஆற்றல் பெற்றவன் மனிதன் மட்டுமே”, என்று கூறினார் ஆல்ஃபெரெட் வாலஸ் (Alfred Wallace) என்ற அறிவியல் அறிஞர். பரிணாம வளர்ச்சித் தத்துவத்தை உருவாக்கியதில் டார்வினுக்கு உள்ள பங்கு இவருக்கும் உண்டு. மனித வளர்ச்சியின் வரலாற்றைச் சற்று ஆழமாக ஆய்வோமானால், மனித சமுதாயத்தின் ஒவ்வொரு முன்னேற்றத்துக்கும் ஒரு கருவி காரணமாய் அமைந்திருக்கிறது என்பது புலனாகும்.

ஏறத்தாழ 8000 ஆண்டுகட்கு முன் அடையாளம் தெரியாத ஒரு மேதை கண்டுபிடித்த கலப்பைதான் வேளாண்மை நாகரிகத்தை உருவாக்கியது. பதினான்காவது நூற்றாண்டு வரை, அறிவுத் துறைகளில், ஆய்வுகளில் கீழை நாடுகள் முன்னணியில் இருந்தன. மேலை நாட்டினர், உயர்கல்வி பெற எகிப்து, பாலஸ்தீனம் போன்ற கிழக்கு நாடுகட்கு வந்து கொண்டிருந்தனர். பதினைந்தாவது நூற்றாண்டில் குட்டன்பர்க் (Gutenberg) அச்சுயந்திரத்தைக் கண்டுபிடித்தார். அதன் பின்னர் அப்பொழுது நம்மை முந்தத் தொடங்கிய மேல் நாட்டினர் தொடர்ந்து முன்னணியில் நிற்கின்றனர். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப்புட்ட நீராவியந்திரம் தொழிற் புரட்சியைத் தோற்றுவித்தது. இந்த நூற்றாண்டின் மையப் பகுதியில் உருவான கணினி (Computer) இந்த நூற்றாண்டின் மாபெரும் புரட்சிகட்குத் துணை நின்று, கல்வியுகத்தை (Age of Knowledge) உருவாக்கி இருக்கிறது.

நாகரிக காலம் தொடங்கி, மனிதன் எண்ணற்ற கருவிகளைப் படைத்திருக்கிறான் எனினும் கணினி இவை அனைத்திலும் அடிப்படையில் வேறானது: தனித்தன்மை வாய்ந்தது. மற்ற கருவிகள் மனிதனின் தசை வலியின், ஐம்புலன்களின் ஆற்றலைப் பெருக்க உதவின. ஆனால் அவன் தனது சிந்தனையின் அடிப்படையில் செய்யும் பணிகளை,

17