பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி
ஒர் ஆயவு

தீயின் கண்டுபிடிப்பு திருப்புமுனை ஆனது. சக்கரம் சரித்திரத்தை மாற்றியது. மின்சாரம் வாழ்க்கையை எளிமை ஆக்கியது. கணினியின் கண்டுபிடிப்போ அகில உலகத்தையும் ஒரு கையகலச் சிப்புக்குள் அடக்கி விட்டது. நவீன சமுதாயத்தை அடையாளம் காட்டும் ஒரு கருவியாய் கணினி விளங்குகிறது. மனித வாழ்வின் பிரிக்க முடியாத ஒர் அங்கமாய் பிணைந்து விட்டது. மக்களின் அன்றாட நடைமுறைகள் ஒவ்வொன்றிலும் கணினியின் ஆதிக்கம் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது.

இத்தகைய காலகட்டத்தில்தான், அறிவியல் தமிழ் அறிஞர், வளர்தமிழ்ச் செல்வர் மணவை முஸ்தபா அவர்களின் 'கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி' நம் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. கணினி என்பது மெத்தப் படித்தவர்களின் சொத்தாக மட்டும் இருந்துவிடக்கூடாது. கணினிக் கல்வி பெருநகரங்களில் வாழ்வோரின் பெருமிதமாய் நின்றுவிடக் கூடாது. தமிழ் நாட்டின் சிற்றுாரில் தமிழ்வழியாய்க் கல்வி கற்கும் மாணவனுக்குக் கணினி அறிவியல் அந்நியமாகிவிடக் கூடாது என்கிற ஆவேசத்தோடு இக் கலைச் சொல் களஞ்சிய அகராதியை திரு மணவையார் எழுதி வெளியிட்டுள்ளார். நவீன அறிவியலில் நாம் எவர்க்கும் சளைத்தவர்கள் இல்லை. ஆங்கிலத்தின் மூலமாகத்தான் கணினி அறிவைப் பெறமுடியும் என்கிற மாயை உடைத்தெறியப் படவேண்டும். கணினித் துறை சார்ந்த அனைத்து நுணுக்கங்களையும் எளிய தமிழில் எடுத்துக் கூறமுடியும் என்கிற சவாலுக்குச் சாட்சியம் கூறுகிறது இந்த நூல்.

கணினியின் வரலாற்றையும் அதன் இன்றைய தாக்கப் பரப்பையும், பயன்பாட்டுத் தளங்களையும் விரிவாகத் தெரிந்து கொண்டால்தான், திரு மணவை முஸ்தபா அவர்களுடைய முயற்சியின் ஆக்கத்தையும், ஆற்றியுள்ள பங்களிப்பின் தாக்கத்தையும் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

கணினியின் வளர்ச்சிப் படிகள்

தொடக்க காலத்தில் கணினிகள் பல்கலைக் கழகங் களிலும் ஆய்வுக் கூடங்களிலும் ஆய்வுப் பொருளாகவே இருந்து வந்தன. 1951இல் தான் கணினி விற்பனைக்கு வந்தது. ரேடிங்டன் நிறுவனம் யுனிவாக்- கணினியை அமெரிக்க அரசுக்கு விற்றது.

25