பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருத்துவத் துறையில் நோயறிதல் பணியில் மட்டுமின்றி, மனித மூளையிலும் இதயத்திலும் சிக்கலான அறுவைச் சிகிச்சைகளைக்கூட கணினியின் உதவியுடன் எளிதாகச் செய்ய முடிகிறது. சீறிப் பாய்ந்து வரும் எதிரியின் ஏவு கணையைக் கூட கணினியின் உதவியுடன், கண்சிமிட்டும் நேரத்தில் கண்டறிந்து அழித்துவிட முடியும்.


எல்லா விந்தைகளுக்கும் அப்பால் ‘இன்டர்நெட்' எனப் படும் இணையம் உலகம் அனைத்தையும் ஒரு கிராமமாய் (Global Village) ஆக்கிவிட்டது. தொழிற்புரட்சிக்கு அடுத்த படியாகத் தகவல் புரட்சி (Information Revolution) இணையத்தின் மூலமாய் இன்று உலகைக் குலுக்கிக் கொண்டிருக்கிறது. மனிதன் காலையில் எழுந்து இரவில் உறங்கப் போகும்வரை அனைத்துப் பணிகளையும் இணையம் மூலமே நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. செய்தித்தாள் படித்தல், உறவினர்க்குக் கடிதம் அனுப்புதல், அறிஞர்களுடன் கலந்துரையாடல்/கருத்துப் பரிமாற்றம், நண்பர்களுடன் அரட்டை, இசை/சினிமாப் பொழுதுபோக்கு, விளையாட்டு, நூலகப் படிப்பு, தொலைபேசி உரையாடல், ரயில்/விமானப் பயண முன்பதிவு, கடையிலுள்ள பொருள்களைப் பார்வை யிட்டு தேர்வு செய்து பணம் செலுத்தி அனுப்பி வைக்க ஆணை தருதல், பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் பெறுதல், ...... - இத்தனை பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஒரு கணினியின் மூலம் இணையத்தில் இணைத்துக் கொண்டு செய்து முடிக்க முடியும். வேறென்ன வேண்டும்?

கணினிக் கல்வியின் இன்றியமையாமை

கணினியின் ஆதிக்கம் பரவப் பரவ கணினி அறிவியலைக் கற்றுத் தேர்வதும் கட்டாயமாகிவிட்டது.

ஒவ்வொரு எந்திரத்திலும் அதற்கே உரிய பாகங்கள் இருக்கின்றன. ஆனால் ஸ்குரூ டிரைவர் என்று சொல்லப்படும் திருப்புளி எந்த எந்திரத்தின் பாகமும் அல்ல. ஆனால் திருப்புளி இல்லாமல் எந்த எந்திரத்தையும் கையாள முடியாது. எந்தவொரு எந்திரத்தையும் கழற்ற, பழுதுபார்க்க, இணைக்க, பராமரிக்க திருப்புளி ஒரு கருவியாகப் பயன்படுகிறது. கணியைத் திருப்புளிக்கு ஒப்பிடலாம். தொடக்க காலத்தில் குறிப்பிட்ட எந்திரத்தின் பாகம்போல் விளங்கிய கணினி இன்றைக்கு அனைத்து எந்திரங்களையும் கையாளவல்ல திருப்புளியாய் ஆகிவிட்டது.

ஆம். ஒரு காலத்தில் பல்கலைக் கழகங்களில் ஒரு பாட மாக மட்டுமே இருந்துவந்த கணினி அறிவியல் நாளடைவில்

28