பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிங்கப்பூரில் நடைபெற்ற 'தமிழ்நெட்-97 மாநாட்டைத் தொடர்ந்து, தமிழ் நாட்டில் சென்னையில் 'தமிழ்நெட் -99' மாநாட்டினை தமிழக அரசு கூட்டியது. உலகெங்கிலு மிருந்து கணினித் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர். தமிழ் விசைப் பலகையைத் தரப்படுத்துதல் (Standardi- sation of Tamil Key Board), தமிழில் வரிவடிவக் குறியீடுகளை {Tamil Glyph Codes) ஒழுங்குபடுத்துதல் ஆகியவை முக்கிய நோக்கமாகக் கொண்டு விவாதிக்கப்பட்டது. மேற்கண்ட பணிகளுக்காக ஓர் உயர்நிலைக் கமிட்டி அமைக்கப்பட்டு 100 நாட்களுக்குள் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படுமென முடிவெடுக்கப் பட்டது.

இறுதியாக்கப்பட்ட 'தமிழ் 99' என்னும் தமிழ் விசைப் பலகையும், ஒற்றைமொழி (Monolingual), இரட்டை மொழி (Bi-lingual), அமைப்புக்கான வரிவடிவக் குறியீடுகளும் தமிழக அரசின் சார்பில் ஜூன் 13ஆம் தேதி வெளியிடப் பட்டன. 'தமிழ் 99' விசைப் பலகைக்கு ஒத்திசைவான தமிழ் மென்பொருள்களையே தமிழக அரசு வாங்குமென ஆணை பிறப்பிக்கப்பட்டது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ் அரசுகளுக்கும் தமிழ்நாடு அரசின் இந்தப் பரிந்துரை அனுப்பிவைக்கப்பட்டது.

தமிழ் மென்பொருள் உருவாக்கும் நிறுவனங்களுக்குத் தகுதி அடிப்படையில் மானியம் வழங்க முடிவெடுக் கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ்மொழியைக் கற்றுப் பயன்பெற தமிழ் இணையப் (மெய்நிகர்) பல்கலைக் கழகம் (Tamil Virtual University) உருவாக்கி டாக்டர் வா.செ.குழந்தைசாமி அவர்களின் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் முழுமையையும் கணினி மயமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், முன்னோடி முயற்சியாக திருவாரூர் மாவட்டத்தில் வருவாய்த் துறை, பத்திரப் பதிவு போன்ற முக்கிய துறைகள் முற்றிலும் கணினி மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் கொட்டிக் கிடக்கும் தகவல் களஞ்சி- யத்தை தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் பெற்றுப் பயனடையும் வகையில் சமுதாய இணைய மையங்களை (Community Internet Centres) அரசு அமைக்க உள்ளது.

31